பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொடையால் விளக்கேற்றி வைக்கப் பெற்ற குடும்பங்கள் பல. அத்தகைய வள்ளன்மை மிக்குடைய பிள்ளை அவர்கள் நிறுவிய அறக்கட்டளையின் சார்பில் நாம் பேசுவது ஒரு சொற்பொழிவு மட்டுமன்று நன்றிக் கடப்பாடும் ஆகும்.

பிள்ளை அவர்கள் சிவநெறியிலும் செந்தமிழிலும் தோய்ந்த நெஞ்சினர். பிள்ளை அவர்களின் எழுத்தும் பேச்சும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஆக்கம் தந்தன. அத்தகு பிள்ளையவர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைச் சொற்பொழிவை, நமது மொழி, சமயம், சமூகம் ஆகியனவற்றிற்குப் பயன்தரத்தக்க வகையில் நிகழ்த்துதல் நல்லது என்று கருதுகிறோம்.

மனித வாழ்க்கை

மனிதன் விலங்கு மல்லன்; கடவுளு மல்லன்: விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை யடைந்து கடவுள் தன்மையை அடைய முயலும் ஒரு தோற்றம் ஆவான் அவன், மனித வடிவத்தில் பிறக்கின்றான். ஆனால், அவன் முயன்றே மனிதத் தன்மையை அடைந்து அவ்வழி இறைமைநிலை எய்துகின்றான். இயல்பாக மனித வாழ்க்கை குறையுடையது. குறையினின்றும் நீங்கி நிறை பெறலே வாழ்க்கை. குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுதற்கும் சமயம் இன்றியமையாதது. சமயம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம்.

சமயத்தின் தேவையும் பயனும்

குறையுடைய மனிதனை நிறையுடையவனாக்க ஓரளவு கல்வி துணைசெய்யும். ஆனால், முழுமையாகத் துணை செய்யக் கல்வியால் இயலாது. “எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை”[1] என்பார் தாயுமானார். “கற்றாரை யான் வேண்டேன்

  1. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9,