பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களில் சாதி, எங்கும் சாதிகளைக் காப்பாற்றும் சிறுநெறிகளே ஆட்சி செய்கின்றன.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இது பஜனை மடத்துப் பாட்டு, ஒழுகலாறோ சின்னஞ்சிறு வட்டத்தில். சாதிச் சக்திகளில் சிக்கிய சைவம் வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சமயத் தலைவர்களின் பின்னால், ஆயிரக் கணக்கில் அடியவர்கள் திரண்டனர். நாடு முழுதும் சைவப் படையெழுச்சி! எப்படி இயன்றது? அவர்கள் சாதி நெறிகளைக் கடந்து விளங்கினார்கள். “கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பரெலாம் ஒருகுலம்” என்றனர். ஏன்? சந்தானாச்சாரியார்களிடத்திலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஞானத்திற்கு ஏது சாதி?

சைவ வேளாளர் திருமரபில் தோன்றிய மெய்கண்ட தேவரை ஞானாசிரியராக ஆதிசைவர் மரபில் தோன்றிய அருணந்தி சிவாசாரியார் ஏற்றுக் கொண்டார். பெற்றான் சாம்பானுக்கு, உமாபதி சிவத்தின் மூலம் தீக்கை அளிக்கச் செய்து இன்ப அன்பினை இறைவன் வழங்கினான் என்றால் சித்தாந்தச் செந்நெறிக்குச் சாதி ஏது? குலம் ஏது? கோத்திரம் ஏது? சிவநெறி நிற்பவர் எல்லாம் நம்மவரே என்று பெரு நெறி பற்றி ஒழுகுதலே சித்தாந்தச் செந்நெறியின் சமுதாய வாழ்க்கை நெறி.

இன்று அடியார்களுக்குப் பஞ்சம். ‘கட்டளைகள்’ இல்லாது போனால் இருக்கும் ஒரு சிலரும் இருக்க மாட்டார்கள். சிவநெறியை நாடு கடந்து இனங்கடந்து உலகப் பொதுநெறியாக வளர்க்க இன்று தேவை ஆயிரம் ஆயிரம் அடியவர்கள். அடியார்களுக்குத் தடையாக இருக்கின்ற சாதிமுறைகளை நீக்கினாலொழிய சிவநெறி - சைவம் எந்த