பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

219


தாயையே அணையும் இயல்பின. ஆதலால் தாய்ப் பன்றியாய்த் தோன்றி முலை தந்து காப்பாற்றிய மூவாப்புகழ் சிவத்திற்கு உண்டு.

தந்தையடிக்க அழுத குழந்தைக்கு அம்மையைக் கொண்டு பாலூட்டச் செய்தான் திருத்தோணியப்பன். திருவிழிமிழலையில் பஞ்சம் வந்துள்ளபோது படிக்காசுகள் தந்தருளி அடியார்களைக் கொண்டு சோறிட்டான். பஞ்சத்தின் துன்பத்தை மாற்றினான். இவையெல்லாம் கருணையின் பெருக்கம்! கருணையின் காட்சி!

சிவநெறியில் நின்றொழுகிய நாயன்மார்கள்தாம் என்ன? காதலனை நச்சரவம் தீண்டப் பிரிந்து அழுத செட்டிப் பெண்ணுக்குக் காதலனை மீட்டுத் தந்து கடிமணம் செய்வித்தது ஞானசம்பந்தப் பெருமானின் அருட்செயல். சைவத்தில் உயிர்களின் துன்பத்தை நீக்கும் பணி அறம் என்று வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஏன்? திருமூலர் நடமாடும் மானிடர்களை-நடமாடும் கோயில்கள் என்று அறிமுகப் படுத்துகின்றார். ஆம், அவர்கள் “நடமாடும் கோயில்கள்”. அங்கும் இறைவன் உள்ஒளிந்து நிற்கின்றான். நாளை மறுநாள் விளங்கியும் தோன்றலாம். உடலிடம் கொண்டருளுதல் இறைவனின் அருட்செயலன்றோ! திருக்கோயிலைப் பட மாடும் கோயில் என்று பகர்கின்றார். படமாடும் கோயிலுக்கு ஈவது பரமனுக்கு ஆகாது என்று எதிர்மறையாகக் கூறுகின்றார். நடமாடும் கோயிலுக்கு ஈவது மக்களுக்கும் ஆம், பரமற்கும் ஆம், என்பது திருமூலர் செய்த சைவப் பொருளியல் புரட்சி, சிவநெறி பொருளியல் ஒப்புரவு நெறியை உணர்த்துகிறது.

அப்பரடிகள் பொருளுடைமை-தனி உடைமை நிலையுடையதன்று என்று கூறுகிறார். அப்பர் வாக்குப்படி பொருளை உடையவர் பொருளுக்குரியவர் அல்லர். அவர் ஒரு அறங்காவலர்; சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர்.