பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

221


தேர்வாளன்; காட்சி மதிப்பீடுகளுக்குத் தகுந்தவாறு புள்ளிகள் வழங்குபவன். அவ்வளவுதான்.

இன்னும் கொஞ்சம் அயரா அன்பில் இறைவனை அணுகினால் அறிவிப்பான்; உணர்த்துவான் வழி நடத்துவான். நடந்து வாழவேண்டியது மானுடச் சாதியேதான். சிவநெறியின் பார்வையிற் கடவுள் ‘Creater’ம் அல்ல. ‘Electric life'ம் அல்ல. சிவம் ஒரு வழித்துணை. அறிவார்வலர்களுக்கு ஆசிரியன். அவன் எந்த உடைமைகள் விவகாரத்திலும் தலையிடுபவனல்லன். அவன் காரணங்களாக இருப்பவனே தவிர, காரியங்களாக இருக்க மாட்டான். அவன் உணர்வுகளாக நின்றருள் புரிவான்.

ஆதலால் சித்தாந்தச் செந்நெறி, ஏழை பணக்காரன் தன்மைக்கு, உயர்சாதி, இழிசாதி அமைப்புக்குத் துணை போகக்கூடியதன்று. சித்தாந்தச் சிவநெறி சார்ந்த சமுதாயம் எல்லாரும் எல்லாம் பெற்று வாழும் சமுதாயமேயாகும். அத்தகு சமுதாயத்தைக் காண்பதே, இன்றுள்ள முதல் கடமை.

இன்று சிவநெறிச் சமுதாயம் தனித்தன்மையுடையதாக இல்லை. சித்தாந்தச் செந்நெறி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அயல்வழி வந்த கலப்புக்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். சிவநெறி அனுபவத்திற்குப் பயன்படுவன திருக்கோயில்கள். திருக்கோயில்களில் தமிழ் முனிவர்களால் செய்யப்பெற்ற ஆகமங்கள் வழி, பூசனைகள் நடைபெற வேண்டும்.

“ஒருவர், சிவநெறியில் நிற்றற்குரிய தீக்கைகளை முறையே பெறாமல் சமயப் பணிகளில் ஈடுபடக் கூடாது” என்பது ஆகம விதி. ஆனால் தீக்கையின்றியே திருவமுது படைக்கும் பணியிலும், மந்திரங்கள் ஓதும் பணியிலும் இடம்பெற்றுச் செய்கின்றனர். சிலர் திருக்கோயில்களின் பூசகர்களாகக் கூட இடம் பெற்றிருக்கின்றனர். திருக்கோயில்