பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காளத்தியண்ணலே விடையெழுதிய பிறகும்கூட நாம் தகுதியுடைய எல்லாருக்கும் வழிபாட்டுரிமையை வழங்கவில்லை.

கண்ணப்பர் வரலாறு நிகழாத காசியில் எல்லாரும் வழிபடலாம். ஆனால் கண்ணப்பர் வரலாறு நிகழ்ந்த தென்புலத்தில் எல்லாரும் வழிபட முடியாது. அப்பரடிகள் அருளிச் செய்துள்ள ஐயாற்றுப் பதிகத்தில் எல்லாரும் போதொடு நீர் சுமந்து வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக ஐயாறப்பனை வழிபட்டனர் என்ற செய்தி கிடைக்கின்றது.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

(தேவா. நான். திரு. 3ஆம் பதிகம் பாடல்.1)

ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் தகுதியும் உரிமையும் உடையவர் அனைவருக்கும் வழிபடும் உரிமை வேண்டும். இதைச் செய்தால்தான் சாதி வேற்றுமைகள் அகலும். பூசனையைச் செய்வதன் மூலம்தான் உயிர்க்கு அனுபவம் கிடைக்கும்.

தாமே வழிபாடு செய்து கொள்ள இயலாதாருக்கும் சிவாசாரியர்கள் செய்து தரலாம். அங்ஙனம் செய்யும் பொழுதும் திருமுறைத் தமிழிலேயே செய்யப் பெற வேண்டும். பக்தி என்பது உயிரின் அனுபவத்திற்குரியது. உயிரின் அனுபவம் தாய்மொழியில்தான் எளிதில் அமையும்.

சுமார்த்தக் கலப்பு, நமது சமயத்துக்கு ஏற்பட்ட பிறகு, தமிழ் வழிபாட்டு முறைகள் நின்று போயின. பழங்காலத்தில் தமிழோடு இசை பாடிதான், வழிபாடு செய்திருக்கின்றனர்.