பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

19


கற்பனவும் இனி அமையும்[1] என்பார் மாணிக்கவாசகர். இதனால் கல்வி தீது என்றும் கற்றலில் பயனில்லை என்றும் பொருள் கொள்ளற்க, “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்”[2] என்றார் திருஞானசம்பந்தர். கல்வியின் பயன் அறிவு: அறிவின் ஆக்கம் அருள். கல்வியின் பயனாகிய அறிவை நாடாமல், அருளைப் பெறாமல் “கற்றுள்ளோம்” என்று தருக்குதல் கூடாது. கற்ற நூற்கருத்தினை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது அறிவு தோன்றுகிறது. அந்த அறிவு குறை நீக்கத்திற்குத் துணை செய்யும். ஆனால் அதுவும் முழுமையாகத் துணை செய்ய இயலாது. என்? அறிவு, வளரும் தன்மையது. “அறிதோறு அறியாமை”[3] என்பார் திருவள்ளுவர். ஒரு குறை நிறையைத் தர இயலாது. நிறைநலம் சான்ற ஒன்றுதான் குறை நீக்கத்திற்குத் துணை செய்ய முடியும்; நிறை நலத்தைத் தரமுடியும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக இருந்தருளும் இறைவன்தான் உயிர்களின் குறை நீக்கத்திற்கும் நிறைநலப் பேற்றுக்கும் துணை செய்ய முடியும். குறை நீங்காத வரையில் துன்பம் நீங்காது; இன்பம் சேராது. இன்ப விழைவுடைய உயிரின் குறை நீக்கத்திற்கு நிறைநலப் பேற்றுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சமயம்.

சமயம் மனிதரை நெறிப்படுத்துவது முறைப்படுத்துவது. சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை சமய வாழ்க்கையில் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும் ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன்.

வேறுபடு சமயங்கள்

இங்ஙனம் உயர்ந்த வாழ்க்கை முறையைக் காட்டும் சமயங்கள் தம்முள் மாறுபடுவது ஏன்? மாறுபாடு மட்டுமன்றி முரண்பாடுகளும் ஏன்? எல்லை கடந்த நிலையில் சமயப்

  1. திருவாசகம், திருப்புலம்பல், 3.
  2. திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3.
  3. திருக்குறள், 1110.