பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

229


கேட்டால், “இருக்கவே இருக்கு தண்ணீர் வண்டி, இல்லையென்றால் தம்பிரான் பதவி” என்று கூறுவார்களாம்.

அதாவது நெல்லை மாவட்டத்துச் சைவ வேளாளர்கள்-வளமுடைய சைவ வேளாளர்கள். அவர்கள் ஆற்றின் தண்ணீர் மட்டுமே குடிப்பர். வாய்ப்பில்லாத சைவ இளைஞர்கள் தண்ணீர் வண்டியில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுக்கும் பணி செய்வர். இல்லையேல் தம்பிரான் பதவிக்குப் போவார்கள். தண்ணீர் வண்டி இழுப்புப் பணியையும் தம்பிரான் பணியையும் ஒன்றாக எண்ணும் நிலைமையை எண்ணி வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.

இத்தகு நிலைமைகள் வளர்ந்ததன் காரணமாகத் தகுதி வாய்ந்தவர்கள் திருமடங்களுக்குத் துறவிகளாக வரும் வாய்ப்பு அருகிப்போயிற்று. தகுதியற்றவர்களாக வந்தாலும் அவர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கும் சமயக் கல்வியை, ஞானத்தை வழங்கி அவர்கள் நிலையை உயர்த்தும் நிலையில் திருமடங்களின் பிற்காலத்திய நிலை இல்லாமல் போயிற்று.

ஒரு காலத்தில் திருமடங்களில் பணிவிடை செய்தவர்கள் கூட, சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அவர்களுக்கு எளிதாக, உயர்வு தாழ்வு பாராட்டாது சமய ஞானத்தைக் கற்றுத்தருகிற இனிய எளிய மனப்போக்கு திருமடங்களின் தலைவர்களிடத்தில் இருந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்றாவது மகாசந்நிதானமாக அமர்ந்திருந்த திருவருள்திரு. அம்பலவாண தேசிகசுவாமிகளிடத்தில் பூசைக்கு மலரெடுத்துத் தரும் பணிவிடை செய்த, “பணிவிடைக்கு”ச் சித்தாந்தத்தைக் கற்றுத் தர, பூப்பிள்ளை அட்டவணையென்று ஒரு சமய சாத்திர நூலே தோன்றியது.