பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பூசல்கள் வளர்ந்து, மனித உலகத்திற்குத் தீமை செய்வானேன்? நியாயமான கேள்விகள்! சமயப் பூசல்கள் சமயத்திற்காக நிகழ்ந்தன அல்ல; நிகழ்வன அல்ல. உலகியல் நலன்களைக் காத்துக் கொள்ள விரும்பும் ஆடையில்லாச் சுயநலப் பிறவிகள், மனித உருவில் நடமாடிய காட்டு விலங்குகள், சமயத்தின் பெயரால் பூசல்களை வளர்த்தன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இச்சமயப் பூசல்கள் நிகழ்த்துவோருக்கும் உண்மையான சமய நெறிக்கும் உண்மையில் தொடர்பே இல்லை; இருத்தலும் இயலாது. சமய வேறுபாடுகள் இயல்பானவை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில், வாழ்ந்த மானிட சாதியின் அனுபவத்தில், ஞானிகளின் உணர்வில் சமய நெறிகள் முகிழ்ந்தன. நிலத்தின் காரணமாகவும், காலத்தின் காரணமாகவும் உற்ற அனுபவங்களின் வாயிலாகவும் அவை தம்முள் மாறுபடுகின்றன. ஏன்? பல சமய நெறிகள் அடிப்படைக் கொள்கையில் முரண்படுவதில்லை. நடைமுறைகளில்தான் மாறுபாடு. இஃது இன்றைய உலகத்தின் பெரும்பான்மையான சமயங்களுக்குப் பொருந்தும். உண்மையான உள்ளுணர்வுடன் நோக்கினால் வேறுபாடு தெரியாது; இல்லை! வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுதான் விழுமிய பண்பு.

வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குயரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா[1]

என்றார் தாயுமானார்.

வணங்கும்துறைகள் பலபல வாக்கி”[2]

என்றார் நம்மாழ்வார்.

தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி![3]

  1. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25
  2. திவ்வியப் பிரபந்தம். 2573.
  3. திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165.