பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

241


தாலும், இயக்க இயங்கும் உயிர்ப்பில்லாத மக்களிடத்தில் தேக்கநிலை தெரிந்ததேயன்றி எதிர்த்தாக்குதலுணர்வு வரவில்லை. தமிழக வரலாற்றின் தொய்வுக்குக் காரணம் இதுவேதான். தூய்மையான உணவு, உடல் நலத்தைத் தரும். ஒன்றை நம்பும் தூய்மையான சிந்தனை, உயிர் எழுச்சியைச் தரும்.

எதிலும் கலப்படம் தீது. காற்றுப் கலப்படத்தைப் பற்றிப் பத்திபத்தியாக எழுதுகின்றனர். உணவுக் கலப்படத்திற்குத் தண்டனை வழங்கச் சட்டமே வந்து விட்டது. கருத்துக் கலப்படத்திற்கு ஏன் இன்னும் எதிர்ப்புத் தோன்றவில்லை? சிந்தனையில் நாட்டமின்மை, அறிவில் தெளிவின்மை, பிழைப்பு மனப்பான்மை ஆகியவற்றால் நமது சமுதாய உள்ளீடழிந்து விட்டது. மனித வாழ்க்கையை உயிர்ப் புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றியது சமயம். சமயம் கடவுளுக்காகத் தோன்றியதன்று; மனிதனுக்காகவே தோன்றியது. மனிதனின் தேவையில் மலர்ந்தது; கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்பத் தோன்றியது. கடவுளின் புகழ்பாடுவதற்காகத் தோன்றிய தல்ல சமயம். மனிதனின் புகழை வளர்க்கத் தோன்றியது. அதற்குக் கருவி, இறைவனின் புகழ் பாடுதல். சமயம் இருந்தும் அதனுடைய தேவை உணரப்படாமையின் காரணமாக, அந்தச் சமயநெறி மனித வாழ்க்கையை நிறைவாக்கும் பாங்கினை அறிய முடியாமையின் காரணமாக இன்றியமையாத் தேவையான ஒன்றைத் தேவையில்லை என்று சொல்கிற கருத்து உருவாகிவிட்டது. சமயம், இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாகி விட்டது. அந்த வெட்ட வெளியைச் சமயத் தொடர்பில்லாமலேயே பொதுவுடைமைத் தத்துவம் நிரப்பும் என்ற நம்பிக்கை தோன்றி வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் காரல்மார்க்சும் இங்கர்சாலுமல்லர்; தலைவர் பெரியாரும் அல்லர். மனித வாழ்க்கையின் இடைவெளிகளை இட்டு நிரப்பாமல் பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல்,