பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

243


படைத்தார் என்று சில சமயங்கள் கூறுகின்றன. உயிர்கள் கடவுளின் படைப்புப் பொருள்களானால், உயிர்களிடம் காணப்படும் குறைகளுக்கும் கடவுளே பொறுப்பேற்க வேண்டும். உயிர்கள் கடவுளின் படைப்பாகிவிட்டால் வளர்ச்சி ஏது? நிறை நோக்கிய பயணம் ஏது? குறிக்கோள் ஏது? நாட்டம் ஏது? வழிபாடுதான் எதற்கு? இஃதொரு விநோதமான நிலை. வேறு சிலர் ‘உயிர்களே கடவுளின் பிரதிபிம்பம்’ என்கின்றனர். அந்த வழியில் பார்த்தாலும் உயிர்களுக்குக் குறையிருக்க முடியாது. ஒரு வெல்லக் கட்டியில் உடைத்த இருபகுதியிலும் ஒரே சுவைதான் இருக்கும். ஒளியின் பிரதிபலிப்பு ஒளியுடையதாகத் தானிருக்கும். அப்படியானால் உயிர்களுக்குக் குறையிருக்க வழியில்லை. ஆதலால் உபதேசமும் தேவையில்லை! வழிபாடும் தேவையில்லை! இஃதொரு புதுரகமான பைத்திய உலகம்! இத்துறையில் செழுந்தமிழ் வழக்குச் செந்நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது: “உயிர், உள்பொருள், என்றும் உள்பொருள். உயிர்களுக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. உயிர் ஒன்றன்று; பலப்பல! உயிர் இயல்பாகக் குறையுடையது; அறியாமையில் பிடிப்புண்டது; ஆயினும் அறிவு பெறுதற்குரியது; சுதந்திரத் தன்மையுடையது. ஆனாலும் இருள்சேர் பிணைப்பில் சுதந்திரத்தை இழந்திருக்கிறது. உயிர் இன்பத் துய்ப்பிற்குரியது. ஆனாலும் துன்பத் தொடக்கில் அல்லலுறுகிறது” என்று உயிரின் இலக்கணத்தைக் கூறுவது குழப்பமில்லாதிருக்கிறது; நடைமுறை உண்மைகளுக்கு இசைந்திருக்கிறது.

உயிர், கடவுளின் பிரதிபிம்பம் அல்லது உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் ஆங்கு அறியாமைக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ தேவையுமில்லை; அவசியமுமில்லை. ஆனால் இத்தகைய சமயக் கொள்கையுடையார் அனைவரும் கற்கின்றனர்; அறிவு வேண்டுமென் கின்றனர். விகுதியில் அறிவில்லையென்றால் பகுதியும் ஐயப்பாட்டிற்குரியது என்ற சராசரி அறிவுகூட அவர்களுக்கு