பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லை! சித்தாந்தச் செந்நெறி, ‘உயிர் இயற்கையானது என்பதுபோலவே உயிரில் அறியாமையும், அறியாமைக்குக் காரணமாகிய ஆணவப்பிணைப்பும் இயற்கை’ என்று அறிவுக்குப் புலனாகும் வகையில் விளக்குகிறது மெய்கண்ட நூலாசிரியர்கள் உயிரின் அறியாமையைச் “செம்பிற் களிம்பு” என்று உவமித்து விளக்குவர். செம்பு, படைப்புப் பொருளன்று; இயற்கைப் பொருள், அதில் களிம்பும் யாரும் சேர்த்ததன்று; இயற்கையின் விளைவு! அதுபோலத்தான் உயிர்க்கு உற்ற ஆணவப்பிணைப்பு: செம்பின் பயன் தெரிவார் களிம்பினைத் தேய்த்துத் துய்மைப்படுத்துவர். அதுபோல் உயிர்களின் பயன் தெரிவானாகிய இறைவன், ஆணவப் பிணைப்பிலிருந்து உயிர்களை மீட்க அறிகருவிகளையும் உணர் கருவிகளையும் வழங்கிப் பிறப்பில் உய்த்து விளக்கமுறச் செய்கின்றான்.

செம்பு, விளக்கிய பொழுது களிம்பு போனது போலத் தோன்றும். தூய்மையின் முன்னே களிம்பு அடங்கிக் கிடந்ததே தவிர, அஃது அகன்றுவிடவில்லை. மீண்டும் தூய்மையின் ஆற்றல் குறையும் பொழுது களிம்பு வெளிப்பட்டுத் தோன்றும். அதுபோலவே ஆணவம் அறிவு மேம்படும்பொழுது அடங்கிக் கிடக்கும். அறிவு சோர்வடையும்பொழுது அற்றம் பார்த்துத் தலையெடுக்கும். ஆதலால் என்றும் ஆணவப் பிணைப்பின் அளவை உள்ளடக்கி வைத்திருக்கவேண்டுமானால் ஓயாத சிந்தனையும் குறைவில்லாத ஞானத்தில் நாட்டமும், ஆற்றல் மிக்க அன்பும் தொய்வேயில்லாத தொண்டின் நெறியும், இமைப்போதும் கூடச் சோர்வுற்று அயல்வழிச் செல்லாது தடுக்கப் பயிருக்கு வேலியென அடியார்களின் கூட்டுறவும் தேவையென விளக்கும் சித்தாந்தத் திறன் எங்கே?

கடவுள் இலக்கணம்

உலகம் இயங்குகிறது. இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஓய்வின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு