பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாட்டை விரும்பி வந்திருக்கிறோம். அதுவே நமது இலக்கு. நமது ஆசிரியன்மார்களும்கூட இந்த மனிதகுல ஒருமைப் பாட்டை வற்புறுத்தியுள்ளனர். வேறுபாடுகளுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் காண வேண்டுமே தவிர ஒருமைப்பாடு என்ற பெயரில் தனித்தன்மைகளை இழந்து உறுதியற்ற கலப்படத்திற்கு ஆளாகக் கூடாது. அறிவியலானாலும் தத்துவங்களானாலும் அவை தகுதிப்பாடு மிகுந்த அனுபவங்களின் வழித்தோன்றியவை. அனுபவங்களின் காரணமாக வேறுபாடுகள் இருக்கலாம். இவ்வேறுபாடுகள் இயற்கையில் அமைந்தவை. ஆதிபத்திய நோக்கத்தோடு செயற்கையில் உருவாக்கப்பட்ட வேற்றுமைகளல்ல. உலக இயக்கத்திற்குக் காரணமாயிருக்கிற ஐம்பூதங்களிடையே வேறுபாடுகள் உள்ளன. அதனால் உலக இயக்கம் தடைப்பட வில்லையே! ஆதலால் சமயங்களிடையேயுள்ள வேறுபாடுகள் தவிர்க்க முடியாதன; வரவேற்கத் தக்கன. அந்தந்த அளவில் அனுபவிக்கத்தக்கன. அனுபவத்தின் வழி, மாறுதலுக்குரியது. இதனை அப்பரடிகள் “அறு வகைச் சமயத்து அவரவரைத் தேற்றுந்தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே! ஏற்றுந் தகையன” என்று கூறி விளக்குகின்றார்.

மனிதகுல வரலாற்றுப்போக்கில் தோன்றிய சமயங்கள், பொதுவாக மனித குலத்தைக் கொடிய காட்டுமிராண்டித் தனத்திலிருந்து விலக்கிப் பையப்பைய இன்றுள்ள நாகரிகத் திற்கு அழைத்து வந்திருக்கின்றன. இன்று மனிதகுலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற அன்புணர்வும், உதவி செய்யும் பண்பும் சமயங்கள் அளித்த கொடைகளேயாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமயமும் சமயத்தைச் சார்ந்த சமய நிறுவனங்களும் தமிழகத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எண்ணற்ற பணிகளைச் செய்து வந்துள்ளன. அவை மொழியை வளர்த்துள்ளன; கலைகளை வளர்த்துள்ளன; மனிதர்களைக் கூடிவாழும் பண்புடையவர் களாக உருமாற்றம் செய்துள்ளன; இன்றைய நாகரிகம் மிக்க