பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போகும். விலகும் நோக்கமன்று; அல்லது விலக்கும் நோக்கமுமன்று. முயற்சி, எல்லை கடந்ததாக இருக்க வேண்டு மென்பதே திருவுள்ளம்! சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம். ஞானத்தின் அடையாளம் முதலில் தன்னிலையினை அறிதல்; குறைகளை ஓர்தல்; குற்றங்களை உணர்தல்; இவற்றினின்றும் விடுதலை பெற்று நிறைவைப் பெறவேண்டுமென்ற உயிர்த்துடிப்பு சிவத்தினிடத்தில் தணியாத ஈடுபாடு! தொழும்பாய் நின்று தொண்டு செய்யும் மனப்பாங்கு! ஓயாது மெய்வருந்தி உழைத்தல்; அவ்வழியில் வரும் துன்பங்களைத் துணுக்கின்றி ஏற்றுக்கொள்ளல்; தற்சார்பு நீங்குதல்; தற்சலுகையைத் துறத்தல். சிவம்-சிவத்தின் பருவுடலாக இருக்கின்ற உயிருலகம் இவற்றின் நலன்நாடிப் பணிகள் செய்தல்; துலாக்கோல் போல இன்பத்திலும் துன்பத்திலும் ஒத்த சிந்தனை பெறுதல்; திருவருளாற்றலையே பற்றி நின்று காண்டல்-செயற்படுதல்; ‘நான்’, ‘எனது’ என்ற இரண்டையும் கடந்த திருவடி ஞானத்தில் நிலைத்து நிற்றல். இவையே ஞானத்தின் அடையாளங்கள்! ஆங்கு அறிவில் தூய்மை! அன்பில் துய்மை! ஆற்றலில் தூய்மை! செய்வினையில் துய்மை! எல்லாம் தூய்மையாம்! ஆங்குப் பல அல்ல! ஒன்றே ஒன்று! அதுவே சிவம்! அவ்வழியே பருவுலகம்! துய்ப்பனவும் உய்ப்பனவும் கூட அவனேயாம்! அஃது ஒரே ஒருலகம்! ஆங்குப் பிரிவில்லை! பேதமில்லை! இதையே திருவள்ளுவர் “வாலறிவன்” என்றார். வாலறிவன் என்பது ஞானத்தின் மறுபெயர்: ஞானம் பெறுமின்! ஞானத்தால் தொழுமின் !

தொண்டு

சமயநெறியின் இரட்டை நாடிகளில் ஒன்று அன்பு; பிறிதொன்று தொண்டு. சமய ஞானத்தில் உண்மையிலேயே முதிர்ச்சியடைந்தவர்கள் தொண்டில் நாட்டம் காட்டுவர்.