பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வன்று. தொண்டர்கள் உயிர்களின் நலம் நோக்கி இறைவனை வாழ்த்துகின்றனர். பரசிவத்திடம் பத்திமைகொள்வதால் நெஞ்சு நெகிழ்கிறது. நெக்கு உருகுகிறது. அதனால் மனமாசு அகலுகிறது; குற்றம் நீங்குகிறது; துன்பம் தொலைகிறது; தூய்மை வந்து சேர்கிறது; குணம் கூடுகிறது; இன்பம் வந்தமைகிறது. பத்திமைப் பாங்குடைய தொண்டிற்குள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வாழ்த்துதல் அடங்குகிறது. அடுத்து, உயிர்களை நோக்கிச் செய்யும் தொண்டு. முற்றிய வைதீகத்தினர் சிலர் கடவுளுக்குச் செய்யும் தொண்டையே வற்புறுத்துவர். “உயிர்களுக்குச் செய்வதைப் பசு புண்ணியம் தானே, நல்வினைதானே, அது பந்தமும் போகமும் தரும்; வீடுபேற்றினைத் தராது” என்பர். இது முற்றிலும் பொருந்தாது.

நாம் உயிர்க்குத் தொண்டு செய்யும் பொழுது உயிர்களாக மட்டும் நினைத்துச் செய்வதில்லை; செய்யவும் கூடாது. “பாத்திரம் சிவமதென்று பணிய வேண்டும்” என்பார் அப்பரடிகள். உயிர்களுக்குத் தொண்டு செய்யும் பொழுது, உயிர்கள், இறைவனின் திருவருளுக்கு ஆளாக்கும் பாத்திரம் என்று செய்தால் அது பதிபுண்ணியமேயாம்” என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு ! நம்முடைய நால்வர் பெருமக்களும் நாள்தோறும் நாட்டில் திருத்தல யாத்திரை செய்து இறைவனைப் புகழ்ந்து பாடினர். அதேபொழுது இறைவனின் என்றும் அருமைக்குரிய உயிர்க்குலத்தின் துன்பங்களை துடைத்தும் தொண்டு செய்தனர். தமிழ்ச் சிந்தனை, துன்பத்திற்கு எதிரானது; பொதுமையைத் தழுவியது.

அப்பரடிகள் இறைவனைப் பற்றிப் பாடிய பதிகத்தில் “இரப்பவர்க்கு ஈய வைத்தார்” என்று பாடுகிறார். இங்கே இன்பப் பேறருளலும் நரகத் துன்பத்தைத் தருதலும் ஈதலை மையமாகக் கொண்டு நிகழ்கின்றன. ஒப்புரவு நெறியை வழங்குகின்றன. இன்று இந்நெறி நிற்பார் யார்? பிச்சை போடுதல் ஈதலாகாது. இதற்குத் திருவள்ளுவம் விளக்கம்