பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிறுவனங்களின் ஆட்சிமுறையை ஏற்கத் தக்கவாறு நாம் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்து சமய ஆட்சிக் கழகம் வேண்டும்

சமயச் சார்பற்ற அரசின் மேலாதிக்கத்திலிருந்து நமது சமய நிறுவனங்களை மீட்டுத் தன்னாதிக்கமுள்ள ஆட்சி முறை அமைப்புக்குக் கொண்டுவர வேண்டும். இந்த ஆட்சி முறையைப் பல்கலைக் கழக வடிவமைப்பில் அமைப்பது நல்லது. இந்து சமயம் என்ற பொதுப் பெயர் தோன்றி விட்டது. இங்கனம் தோன்றிய பொது அமைப்பில் நன்மைகளும் உண்டு; இழப்புக்களும் உண்டு. அவற்றை விரிவாக ஆராய்வது நிறைவான பயன்தராது. ஆனாலும் பொது அமைப்பு இந்து சமயம் என்ற பெயரில் அமையும். அதனுடைய ஆட்சிமுறைச் செயலமைப்பில் இந்து சமயத்தின் உறுப்புகளாக நிலவும் சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணாபத்தியம், செளரம் ஆகியவற்றின் தனித்தன்மையைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பெற்று, அக்குழுக்களே அந்தத் துறையில் பொறுப்புக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதால் பொதுத் தன்மைக்கும் ஊறில்லை; தனித் தன்மைக்கும் சிதைவில்லை; கலப்படமும் தவிர்க்கப்படும்; ஓர் ஊரும் ஒரு கடவுளைத் தொழும் மனப் பாங்கும் இல்லாத நாடோடிகளால் ஏற்படக்கூடும் நன்னெறிச் சிதைவிலிருந்து நம்முடைய சமயத்தைப் பாதுகாக்கலாம்.

இந்து சமய ஆட்சிக் கழகத்தின் செயலமைப்பில் ஆட்சிக்குழுவும் பேரவையும் அமையும். ஆட்சிக் குழுவில் திருமடங்களின் தலைவர்கள் அலுவல் அடிப்படையில் இடம்பெறுவர். துறைதோறும் சிறந்து விளங்கும் சமய அறிஞர்களை ஆட்சிக்குழு தம் உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளும். சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியன, நமது