பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிடிக்கப் பெற வேண்டும். அதாவது, ஒரு திருக்கோயிலில் நிறைய வருமானம் வருவதால் அங்கு ஆடம்பரச் செலவுகளும் இன்னொரு திருக்கோயிலில் வருவாயின்மையால் அங்குப் பூசனையில்லாதிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். திருமடங்களைப் பொறுத்தவரையில் அவைகளுடைய சமயப் பிரசார சமூகப் பணித்துறைக்குரிய நிதிகள் ஆட்சிக் கழகத்தில் மையப்படுத்தப்பட்டுத் திட்டமிட்டுச் செய்யப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் செய்வதன் மூலம் எந்த மடம் பெரிய மடம்? என்ற வினாவைச் சுற்றி வட்டமிட்டு வீணாகச் செலவாகும் செல்வமும் பாதுகாக்கப் பெறும், விளம்பரப் போட்டிகள் குறைந்து செயற் போட்டிகள் தோன்றிச் செயல் திறமும் கூடும். இந்தச் செய்திகள் கசப்பாக இருக்கலாம். ஆனால், நிகழவேண்டியவை என்பதை அன்பு கூர்ந்து மறந்து விடாதீர்கள். இந்த முறை, செயல்படும்போதுதான் திருக்கோயில், திருமடங்கள், மக்கள் என்ற ஒருங்கிணைப்புத் தோன்ற முடியும். இவ்வாறு சிந்தனை செய்ய ஒவ்வொருவரும் முயலுங்கள் ! கலந்து பேசுங்கள்! இதைப்பற்றிச் சிந்திக்க அறிஞர் குழுவை அமையுங்கள்! கருத்தரங்குகள் நடத்துங்கள்! ஆய்வறிக்கைகளைப் பெறுங்கள்! மாநாட்டை நடத்துங்கள்! இந்தச் சிந்தனையை-செய்தியை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்! திருவருள் துணை செய்யும்.

வேண்டிய சீர்த்திருத்தம்

நம் சமயம் காலத்தால் தொன்மையானது. பழமைப் பண்பு மிக்கு விளங்குவது. ஆயினும் புதுமைப் பொலிவுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய் - என்ற திருவாசகக் கருத்து நமது சமயத்திற்கும் பொருந்தும், நமது சமயநெறிக்குச் சீர்திருத்தங்கள் இப்போதைக்குத் தேவையில்லை. எதிர்காலத் தேவை பற்றிக் காலம் முடிவு