பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

265


சாதி வேற்றுமைகள்தான் மத மாற்றங்களுக்குக் காரணம். அதுமட்டுமன்று கோடானுகோடி மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து வாழ முடியாமல் தடை செய்கிறது; வலிமையை இழக்கச் செய்கிறது. ஆதலால் சாதி வேற்றுமைகளை அறவே அகற்றுங்கள்! அதுவே இனி வரும் சிறப்பான எதிர்காலத்திற்குரிய பணி.

வறுமையுற்றோர்க்கு வாழ்வளித்தல்

உலகில் பல்வேறு சமயவழிப்பட்ட சமுதாயங்களுக்குள் நமது சமுதாயத்தில்தான் வறுமை அதிகம். “பொன் வேண்டேன்; பொருள் வேண்டேன்” என்று பாடிய மாணிக்கவாசகர்கூட நல்குரவைத் “தொல்விடம்” என்று சித்திரிக்கிறார். இந்தத் தொல்விடத்தின் தொடக்கில் இன்று அல்லலுறுவோர் எத்தனை பேர்? திசைநோக்கித் தொழும் திருவேடங் கொண்டு வயிற்றுக்கு இரந்து நிற்போர் எத்தனைபேர்? ‘திருக் கோயில் திருவிழா என்றால் பிச்சைக்காரர்களைத் தானே பார்க்கிறோம்! ஏன் இந்த அவலநிலை? நமது சமயம் மனிதாபிமானம் இல்லாததா? அல்லது நமது சமய நிறுவனங்களுக்குத்தான் உடைமையில்லையா? நாம் தான் ஏழையா? நாம் கடவுள் நம்பிக்கை, சடங்கு என்ற பேரில் இதை வற்றச் செய்து விட்டோம்.

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்கஃ தாமே.

என்று திருமூலர் காட்டிய திருநெறி, நம்முடைய சமயத்தில் நடைமுறையில் இல்லை.

நாம் கடவுளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்! ஆனால் மனிதனுக்கு எதையும் செய்யத் தயாராக இல்லை. இந்த அவலநிலை மாறவேண்டும். கடவுளுக்கு