பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

23


சிவபெருமானை, திருமாலை, முருகனை வழிபடும் பேற்றினைப் பெற்றவர்கள். ஆயினும், தத்துவ அடிப்படையில் அவர்கள் சமயம் “சித்தாந்தம்” என்று அழைக்கப்பெறும். டாக்டர் ஜி.யூ போப், “தமிழரின் அறிவில் முகிழ்த்த ஒப்பற்ற சமயநெறி சித்தாந்தம்” என்று பாராட்டுவார். அதுபோலவே கெளடி என்னும் பாதிரித் துரைமகனாரும் “தமிழரின் பேரறிவில் தோன்றிய நெறியே சித்தாந்தச் செந்நெறி” என்பார்.

வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்

என்று வடநூல் மரபு பாராட்டும்.

தமிழர் சமயத்தின் கொள்கைச் சிறப்புகள்

தமிழர் சமய நெறியாகிய சித்தாந்தச் சமயம் அறிவாராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்கத்தக்கது. முற்றாக அது நம்பிக்கையின் வழிபட்டதன்று. ‘சித்தாந்தம்’ என்ற சொல்லுக்கே பொருள் ‘முடிந்த முடிபு’ என்பது. அறிவாராய்ச்சியில் வினாக்களைக் கேட்டுக்கேட்டு மெய்யுணர்வில் வளர்ந்துவளர்ந்து செம்பொருள் கண்டார் உணர்த்திய செந்நெறி-அது. அப்பாடிகள்,

............. ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன.....[1]

என்பார். தமிழர் சமயம் அறிவார்ந்த உண்மைகளுக்கு மாறுபட்டதன்று. ஆனாலும் அறிவு எல்லையில் மட்டும் நின்று ஆராயத்தக்கதுமன்று. ஆழ்ந்த உண்மைகள் அனுபவத்திற்கே யுரியன. சித்தாந்தச் சமயம் ஞான நெறியாகும்.

சித்தாந்தச் சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கன. சித்தாந்தச் சமயம்

  1. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 972.