பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

267


அந்தப் பிரச்சனையிலிருந்து, அவர்கள் முற்றும் ஒதுங்கி விடவுமில்லை. மறைமுகமாக மீண்டும் சமுதாயச் சிக்கல்களுக்குரிய செய்திகளைப் பேசத்தான் செய்கின்றனர்; வற்புறுத்தத் தான் செய்கின்றனர். அதற்கேற்றவாறு உவமைகளையும் அவர்கள் தேடிக் கண்டு பிடிக்கத்தான் செய்கின்றனர். உண்மையாகச் சொல்லப்போனால் அரசியல் என்பது ஒரு வேலி, ஒரு பாதுகாப்பு. அதுவும் சமயநெறிகள் வகுத்துக் காட்டிய வாழ்க்கை நியதிகள். நீதிநெறிகள் மக்கள் மன்றத்தில் நடைமுறைகள் மீறப்பட்டபொழுது-சமயம் மக்களுடைய உணர்வுகளின்மீது இருந்த பிடிப்பை இழந்த பொழுது எதிர்மறையால் ஒதுக்கும் வகையில் அதே நியதியை, நீதியைக் காப்பாற்றத்தான் அரசியல் தோன்றியது. இன்றையச் சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை முறைபிறழ்ந்த நெறியல்லா நெறியினை நெறியெனக் காட்டும் நெறிப் பிறழ்வுகள்தாம் என்பதை நாம் உணர்ந்தேயாக வேண்டும்.

இத்துறையில் 'ஊழ்' முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. நாம் அதை மறுக்கவில்லை. ஆயினும் ஊழ் என்பது எது? அதன் எல்லை எது? எந்த வகைக் குற்றத்திற்கு ஊழைக் காரணம் காட்டுவது? என்றெல்லாம் ஆராய வேண்டாமா? அவர்கள் கூறுகிறபடி “எல்லாம் ஊழினாலேயே நடக்கிறது” என்று கொள்ளுங்கள்! தீயூழினால் அல்லற்படுவாருக்கு உதவி செய்யாது போனால் மற்றவர்தம் தீயூழ் எப்படி நல்லூழாக மாறும்? நல்லூழ் முதிர்ந்து எப்போது இருவினையொப்பாக உருப்பெறும்? தீயூழும் நல்லூழும் நோயும் மருந்தும்போல் - உடன்நிகழ்வன அல்லவா? இந்த விளக்கத்தை இப்போது சொல்லிக்கொண்டி ருக்கிறோமா? நடைமுறைப்படுத்துகிறோமோ? ஆதலால் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் சமய நெறியாளர்கள் சிந்தனை செய்யவேண்டும். இத்துறையில் கச்சியப்ப சிவாசாரியார் அருளிய பாடல் ஒன்றை இங்கே நினைவுகூர்தல் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்: