பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“அரசியலா? சமயமா?” என்ற கேள்வி இன்றைய மக்கள் மன்றத்தின் கேள்வி.

அரசியல்வாதிகள் ‘சமயம் சமுதாயத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது-தடையாக இருக்கிறது’ என்று கூறுகின்றனர்.

அதே நிலையில் இன்றையச் சமயவாதிகள் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் அருள்நெறி இயக்கத்தினருக்கு உண்மை காணவேண்டும் என்ற உணர்வு எழுந்தது இயற்கையே.

சமயம் மனித இன வாழ்வுக்கு முட்டுக்கட்டை அல்ல; அது வாழ்வுக்குப்பயன்படுவது-வாழ்க்கையை வளப்படுத்துவது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்.

சமயம் என்ற பொதுத் தன்மையிலேயே இங்கு விவாதிக்கப் பெறுகிறது. சமய வேற்றுமைகளைக் கடந்த அருளியற் பண்பிலேயே சமயம் இங்கு பேசப்படுகிறது - தண்ணீர், வான் ஆகியவற்றின் பெயர் நாட்டுக்கு நாடு மொழியால் வேறுபட்டிருந்தாலும் அதன் இயல் ஒன்றாவது போல, சமயங்கள் பலவாறாகத் தோற்றமளித்தாலும் அவற்றின் அடிப்படைக் கொள்கை-தத்துவம் ஒன்றுதான்.

மதம் என்றாலே கொள்கை என்றுதான் பொருள். நன்னூலார் கருத்தும் இதுவே. “எழுவகை மதமே” என்று தொடங்கும் அவரது நூற்பாவே இதற்குச் சான்று. மனித சமுதாயம் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் முதன் முதலில் உருவான கொள்கையே சமயம்தான். அதனாலேயே சிறப்பாக மதம் என்ற பெயர் சமயத்திற்கே உரியதாயிற்று.

அறிவிலே தெளிவைக் காட்டி-அன்பியலிலே ஆழ்த்தி -அகவாழ்வைத் தொட்டு-அகவாழ்வை வளர்க்கும் நெறியே சமய நெறி. அங்ஙனம் செயற்படாதன சமய நெறியே அல்ல.