பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

25


ருக்கும் சுவையில் வேறுபாடு ஏது? அண்ட வெளிக் காற்றுக்கும் குடத்துள் காற்றுக்கும் குணத்தில் வேறுபாடு ஏது? இக்கொள்கையும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராததே, உயிர்கள் என்றும் உள்ளவை; அவை அறியும் இயல்பின; அறிவு மயமாக மாறும் தகுதியுடையன. ஆயினும் இயற்கையாக உயிர்களின் அறியும் முயற்சியைத் தடுத்து அறியாமைப் படுத்தும் ஆணவத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. “உயிர்கள் அறியாமையினின்றும் விலகி அறிவைப்பெற, ஞானத்தைப்பெறத் துணை செய்யும் ஆசிரியன் கடவுள்” என்பது சித்தாந்தச் செந்நெறியின் முழுநிறைக் கொள்கை. இக்கொள்கை அனேகமாக மாமுனிவர் மார்க்ஸ் போன்றவர் விவாதங்களோடு ஒத்து நிற்கும் தகுதியுடையது. பழமைக்கும் புதுமைக்கும் ஏற்ற நெறி.

தமிழர் தம்முடைய மெய்யுணர்வை இயற்கையோடிசைந்த வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டனர். நம்முடைய வாழ்வியல் முறை, இயற்கைக்கு முரண்படுவதுமன்று; இயற்கைக்கு அடிமையாதலும் அன்று. இஃது ஒரு தெளிவான வாழ்வியல் முறை. மேலும், நமது சமய சமுதாய வாழ்வியல் ஊற்றுப் பெருக்கைப்போல் உள்ளுணர்வில் தேக்கமடையாமல் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பெற்று வந்திருக்கிறது. காலத்திற்கிசைந்த வளர்ச்சியில்லாத சமுதாய அமைப்பிலேயே தேக்கம் ஏற்படும். அப்பொழுதுதான் பழைமை என்ற ஒன்று உருவாகும். பின் தேக்கத்தின் புழுக்கத்தால் சமுதாயம் துன்புறும்பொழுது புதுமைவேட்கை தோன்றும், ஆனால் தமிழ்ச் சமுதாய அமைப்பில் தேக்கம் ஏற்படச் சிந்தனையாளர்கள் அனுமதித்ததில்லை. நம்முடைய சமய நெறியிலும் சமுதாய அமைப்பிலும் பழங்காலத்திலிருந்து உயிர்ப்புள்ள சிந்தனை செயற்பட்டு வந்திருக்கிறது. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே[1]

  1. திருவாசகம், திருவெம்பாவை, 9