பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவிஞன் தெளிவான-உறுதியான பாதையைக் காட்டுகிறான். நாமனைவரும் இன்பமாக வாழ உணவு தேவைஅந்த உணவைத் தடையின்றிப் பெறுவதற்குரிய வழி என்ன?

காடுவெட்டி நிலம் திருத்திக் கழனிகள் காண்பதா? கழனிகளுக்கு நீர்பாய்ச்சச் சண்டை போட்டுக்கொள்வதா? இவை தேவையான முயற்சிகளேயாம்! ஆனாலும் இம் முயற்சிகளே போதுமானவை யல்ல-வசையிலா வண்பயன் குன்றும்! எப்பொழுது? - ஏன்?-இசையிலா மக்களை நிலமகள் தாங்கும்பொழுது-என்று தமிழ்மறை பேசுகிறது.

மற்றொருவரைக்கொல்ல நினையாமல் மக்கள் வாழுங்காலத்தில் இயற்கை உணவளிக்கும் என்கிறான் பாரதி. “கொல்லாமல்” என்று கூறாமல்-"கொல்ல நினையாமல்” என்று நினைப்பொடு தொடர்புபடுத்திக் கவிஞன் கூறுவது சிந்தனைக்குரிய ஒன்று.

விவாதத்துக்குரிய தலைப்பு சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பது. தலைப்பு இரண்டும் தேவை என்பதை வற்புறுத்துகிறது. ஆனால், எது முதலிடம் பெறுவது என்பதே கேள்வி: இன்றையச் சமுதாயத்தில் அரசியலே முழுக்க முழுக்க முதலிடம் பெற்றுவருகிறது. எங்கும் அரசியல் எண்ணங்கள்! எங்கும் அரசியல் அரங்கங்கள். அருளியல் வழிபட்ட எண்ணங்கள் அருகிக்கொண்டே வருகின்றன. இப்போக்கு சமுதாயத்துக்கு நலம் பயப்பதல்ல.

சமுதாயத்தில் முன்னிடம் - முதலிடம் பெற வேண்டியது சமயமே ஆகும். சமய வழிப்பட்ட சமுதாயத்தை நிலை நின்று காக்க அரசியல் வேண்டும். தோட்டத்தில் அவரை பயிர் செய்ய வேண்டும் என்று சொன்னால் நில முழுதும்-வித்திட்டு செடி முளைத்துக் கொடிவிட்ட பின் கொழுகொம்பு நட்டு வளர்ப்பதே முறை. மனநலம் திருத்தி அருள் என்னும் வித்திட்டு அறம் என்ற செடி கண்டு சமுதாய