பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றன. அறிவியலின் இலட்சிய எல்லை-அதனுடைய இலட்சியக் கோடு இன்னும் நம்முடைய கைகளுக்கும் அறிவிற்கும் மூளைக்கும் அனுபவத்துக்கும் எட்டாமல் தூரத்திலே இருக்கிறது என்று தெரிவதனாலேயே அந்தப் பேரறிவை “உயர்ந்த அறிவு” (Wisdom) என்று சொல்கிறார்கள். அந்த உயர்ந்த அறிவு இருக்கிறதே அதைத்தான் இறைவன் அல்லது அருளியல் சார்ந்த தலைவன் என்று வாழ்த்துகின்றோம். அதையேதான் திருவள்ளுவரும் கூடத் தெளிவாக உறுதியாக இடம் நோக்கிச் சொன்னாரோ, அல்லது வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லி வைத்தாரோ, தெரியவில்லை. இறைவனைப் பற்றிச் சொல்லுகிறபொழுது ‘வாளறிவன்’ என்று சொல்லுகின்றார். அறிவாலே தேடக்கூடிய தலைவன், அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிஞனாக இருக்கின்ற தலைவன். அங்கே அறிவு தூய்மையாக இருக்கிறது. ஆக்கமாக இருக்கிறது. எழுச்சியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக. எனவே அறிவியலை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டு இதுசரி இதுதவறு என்று முடிவு செய்ய முடியாது. எனவே அறிவு வளர்ந்து கொண்டே போகிறது. நேற்றைய அறிவைவிட இன்றைய அறிவு வளர்ந்திருக்கிறது. இன்றைய அறிவைவிட நாளைய அறிவு நிச்சயமாக வளரப் போகின்றது. நேற்றைய அறிவும் இன்றைய அறிவும் முரண்படுகிறது. இன்றைய அறிவும் நாளைய அறிவும் முரண்படப் போகிறது. அப்படி முரண்படுவதற்குக் காரணம் தம்முடைய வளர்ச்சி, அப்படி வளர்ந்து கொண்டே இருக்கிற அறிவைப் பார்க்கின்றபொழுது ஒரு பெரிய ஏணியிலே இரண்டு படியைத் தாண்டி விட்டால் இன்னும் இருபத்திரண்டு படிகள் உள்ளன என்பது எப்படி உண்மையோ அப்படியே இந்த அறிவியலுலகத்திற்கு அப்பாற்பட்ட-இன்னும் வளர்ந்த முழுமையுடைய-முழுத் தன்மையுடைய அறிவியல் ஒன்று இருக்கிறது என்பது உண்மை.