பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

303


உயர்ந்த பண்பாட்டிற்குத்தான் சமய வாழ்வு என்று பெயர். அந்தச் சமய வாழ்வு எந்தக் காலத்திலும் மனிதனுக்குத் தேவைப்படும். அவன் மிக உயர்ந்த வானவெளியிலே பறக்கின்ற காலத்திலே கூட, செவ்வாய் மண்டலத்திற்குத் தேடிப்பார்க்கின்ற பொழுது அமைதி தேவைப்படுகின்றது. உடம்பு மாளிகையிலே தூங்கினாலும், உடம்பு வான ஊர்தியிலே தூங்கினாலும் அவனடைய மனம் மட்டும் எங்கோ அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. அழுது கொண்டிருக்கிறது. அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி அழுகின்ற-அவலப்படுகின்ற-அலைந்து திரிகின்ற ஆன்மாவிற்கு அந்த ஒரு அமைதி-ஒரு சூழல் வேண்டும் என்று சொன்னால் வளர்ந்து வருகின்ற அறிவியல் உச்சத்தினுடைய ஆபத்திலே அவனுக்கு அமைதியான சமயம் தேவைப்படுகிறது. மலை ஏற, ஏற, மலை உச்சி ஏற ஏற அவனை நோக்கி ஒரு அச்சம் உருவாவதை நீங்கள் பார்க்கிறீர்கள். வானவெளியிலே ஊர்ந்து போகப் போகப் பழக்கப்பட்டவனாயிருந்தாலும் சரி, ஏதோ ஒரு அச்சம் அவனைச் சூழ்கிறது. அவன் அதைத் தன்னைத்தானே சமாளித்துக் கொள்கிறான். அப்படி வருகின்ற காலத்திலே எல்லாம் அவனுக்குச் சேமமான அமைதியான குடியிருப் பதற்குரிய சூழ்நிலை வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எனவே நல்ல விஞ்ஞானக் கட்டத்தினுடைய உச்சத்திலே வளர்கின்ற பொழுதுகூட அவனுக்கு அருளியலின் துணை அவசியம் தேவைப்படுகிறது. அப்படிச் சமயம் என்று பார்க்கின்றபொழுது வெறும் சடங்குகளை அல்லது நம்பிக்கைகளை நீ நம்பு என்று சொல்லுகிற சமயம் இருக்கிறதே அது ஒரு காலத்தில் வாழாமற்போனால் போகலாம். அல்லது கதைகளை, புராணங்களை நம்பிக் கொண்டு வாழ்கின்ற சமயம் இருக்கிறதே வேண்டுமானால் நசித்துப் போகலாம். அதிலிருந்து நம்பிக்கை வீணாகப் போகலாம். அதைச் சொல்லப் போனால்