பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொல்லுகிறார்கள். நகைச்சுவையாகச் சொல்லுகிறார்கள். விஞ்ஞானமும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்திலே மிக மிக இளைஞர்களாக இருப்பார்கள். அல்லது சமயத்திலே ஒன்றும் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். விஞ்ஞானமும், சமயமும், அறிவியலும், அருளியலும் ஒன்றோ டொன்று முரண்படுகிறது என்று சொன்னால் அப்படிச் சொல்கிறவர்கள், அறிவியல் துறையிலே வளராத இளைஞர்களாக, இன்னும்-இப்பொழுதுதான் அறிவியலைப் படிக்கின்றவர்களாக, அறிவியலில் உச்சகட்டத்தை அடையாதவர்களாக இருப்பார்கள். அல்லது, சமயத் துறையிலே இருப்பவர்கள் அவற்றில் பூரணத் தெளிவில்லாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரும்தான் அறிவியலும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்லுவார்கள். அப்படி இல்லாதவர்கள், தேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், தெளிவான அறிவுடைய இரண்டும் ஒரே திசையை நோக்கிப் போகின்றன என்றே சொல்லுவர்.


ஒரு பொருளைப் பார்க்கின்றபொழுது, பொருளின் வேறாக நின்று அனுபவிப்பது ஒரு முறை; பொருளோடு சேர்ந்து பொருளோடு ஒன்றியிருந்து அனுபவிப்பது ஒரு முறை. விஞ்ஞானி-அறிவியல் மேதை பொருளோடு வேறாக நின்று, பொருளுக்கு வெளியே நின்று பொருளைப் பார்த்துப் பார்த்து, ஆராய்ந்து ஆராய்ந்து பொருளோடு தன்னுடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறான். ஆனால், மெஞ்ஞானிகள்-அருளியல் மேதைகள் பொருளோடு ஒன்றி, பொருளே தாமாக ஆகி அப்பொருளின் அனுபவங்களையெல்லாம் - மாட்சிமைகளையெல்லாம் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். இந்த நுணுக்கமான வேற்றுமைகளை எல்லாம் பார்க்கும்பொழுது இந்த இருவரும்