பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிறைவு செய்ய முடியாத காலத்திலே அந்த நிறைவு செய்வதற்குத் துணையாக அறிவியலைப் பயன்படுத்துகின்ற சூழ்நிலை வரவே போகிறது. எனவே மீண்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் ஒரே ஒரு வார்த்தைதான் வருகின்றது. அகங்கை, புறங்கை போல மனித வாழ்வுக்கு அறிவியலும் அருளியலும், ஒரு காசின் இருபுறமும் போல. அகங்கை வேண்டுமா? புறங்கை வேண்டுமா? அகங்கை வாழ்ந்தால் புறங்கை வாழுமா? புறங்கை வாழ்ந்தால் அகங்கை வாழுமா? அல்லது காசில் பூ வாழ்ந்தால் தலை வாழுமா? தலை வாழ்ந்தால் பூ வாழுமா? என்று கேட்கப் பெறுகிற கேள்விகள் எப்படிச் சிறுபிள்ளைத் தனமான கேள்விகளாக இருக்கின்றனவோ அதுபோலவே வளர்கின்ற விஞ்ஞானத்தில் சமயம் வாழுமா? என்று கேட்கின்ற வேள்வி என்று நான் கருதுகிறேன். எனவே உயர்ந்த விஞ்ஞானிகள், உயர்ந்த கவிஞர்கள், உயர்ந்த இலட்சியவாதிகள் எனக்குப் பிறகு பேசுகின்ற பொழுது நன்றாக நெஞ்சிலே ஈரம் பிறக்கிறது - கசிவு பிறக்கிறது. மனிதன் அதிசயிக்கின்ற காட்சிகளைப் பார்த்து-அனுபவிக்கின்ற உயர்ந்த எண்ணங்களைப் பார்த்து -அவன் பாடுகின்ற பாடல்களும், கவிதைகளும், காண்கின்ற காட்சிகளும் அறிவியல் வடிப்புக்களும் ஆயிரம் ஆயிரமாகப் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் சிசரோ என்ற பேரறிஞன் வாழ்ந்தான். அவனை ‘அரசியல் ஞானி’ என்று உலகம் பாராட்டுகிறது. அந்தப் பேரறிஞன் சொல்கிறான்; இந்த உலகத்தில் வியத்தகு அமைப்புக்களிலே-வியத்தகு நிகழ்ச்சிகளிலே எத்தனையோ அதிசயங்கள் விரிந்து கிடக்கின்றன. மாற்றுதற்கரிய எத்தனையோ பெரிய நிகழ்ச்சிகள்-அற்புதங்கள் நிகழ்கின்றன. இவைகளுக்கெல்லாம் யார் காரணமாக இருக்கக்கூடும்? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ‘நிச்சயமாக மனிதனில்லை’ என்று சொல்கின்றான். மனிதனுக்கு நினைப்பும் வருகிறது. மறதியும் வருகிறது.