பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டுபிடித்து அந்தக் காரணத்தையே மாற்றினால்தான் ஆன்மீக உலகம் வெற்றி பெற முடியும்.

பொதுவாக விஞ்ஞான உலகம்-அறிவியல் உலகம் பூத பெளதிகத்தால் ஆன உலகத்தை நெருக்கிக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. காலையில் பனிரெண்டரை மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்த நான் மாலை 6.00 மணிக்கு மலேசிய நாட்டில் வாழ்கின்ற தமிழர்களோடு பேசுகின்ற அளவுக்கு, அறிவியல் விரைந்து நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது. உலகில் எல்லா அண்டங்களையும், கண்டங்களையும் இணைக்கின்ற சாலைகள் உருவாகிவிட்டன. வான்வெளிச் சாலைகள் கூடத் தோன்றி, கண்ணுக்கு அப்பாற்பட்ட அண்டங்களையும் கண்டங்களையும் கூட இணைக்கின்ற அளவுக்கு இன்றைக்கு அறிவியல் வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் நிலங்கள் நெருங்கி வருவதைப் போல, நிலத்தில் வாழ்கின்ற மக்கள் தமக்குள் நெருங்கி வருகிறார்களா? அவர்களுடைய இதயங்கள் இணைக்கப்படுகின்றனவா? இந்த உலக நெருக்கத்திற்குப் பயன்பட வேண்டிய ஆன்மீக அன்பு வளர்ந்திருக்கிறதா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகம் நெருங்கி வரவர நாம் ஏதோ இதயத்தால் பிரிந்து செல்வதைப் போலத் தோன்றகிறது. இந்த உணர்வு நிலையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். என்னுடைய நெடிய வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோளில் ஒன்று, நிச்சயமாக உலகத்திற்கு மனிதன் அமைதியாக வாழத்தான் வந்தான்; கடவுள் இந்த உலகத்தை மனிதனுக்கு ஒரு பெரிய கொடையாகத்தான் கொடுத்தான்; இந்த இனிய உலகத்தில் இனிமையாக வாழ்ந்து, தன்னை வளர்த்துக் கொண்டு, தன்னை உய்வுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான், இறையவனுடைய திருவுள்ளம்.

சிலபேர் மிகவும் அவசரப்படுகிறார்கள், “மோட்சத்திற்கு - சொர்க்கத்திற்குப் போய்விட்டால் தேவலாம்” என்று.