பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரவில்லை. அந்த நெல்லை நன்றாக ஈரம் போகக் காயப் போட்டுக் களஞ்சியத்தில் கொண்டு வந்து வைப்பார்கள். ஒரு பத்து விழுக்காடு சுவை வரும். ஆனாலும் தின்னமுடியாது. அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்து, அதைச் சோறாக்கித் தின்னமுற்படுகிறபொழுது, அந்த நெல்லை மீண்டும் தண்ணீரில் நனைப்பார்கள். முன்பு எந்த ஈரத்தை நீக்க முயன்று காயப் போட்டார்க்ளோ, அதே தண்ணீரில் மீண்டும் முயன்று நனைத்து நன்றாக அவிப்பார்கள். அவித்த பிறகும் மீண்டும் ஒரு முறை காயப் போடுவார்கள். மிக நல்ல காய்ச்சலாகக் காயப்போட்டு நான்கு நெல்லை எடுத்து வீட்டுத்தாய், தேய்த்து அரிசியை வாயிலே போட்டுக் ‘கடுக்’ என்று சத்தம் கேட்டால் அரைக்கலாம் என்பார். அரைத்து அரிசியாகக் கொண்டு வந்த பின்பும், சோறாக வில்லை; தின்ன முடியாது. பெரும் பசிக்காரன்தான் போகிற பொழுது வருகிறபொழுது கொஞ்சம் அரிசி எடுத்துத் தின்பான். அது சோறாக வேண்டும் என்று சொன்னால், மீண்டும் தண்ணீரிலே போட வேண்டி இருக்கிறது. ஓடாத ஆடாத, பாடாத அகங்காரமில்லாத நெல்லைச் சோறாக்குவதற்கே மூன்று தரம் நனைத்து, மூன்று தரம் காயப்போட வேண்டியிருக்கிறது என்று சொன்னால், ஆட்டம், பாட்டம் அத்தனையும் போடுகிற மனிதனைச் சும்மாவா பக்குவப்படுத்த முடியும்? இவனையும் ஏதாவது ஒன்றில் நனைத்து, ஏதாவது ஒன்றில் காயப் போட்டால் சுமாராகத் தேறுவான். இவனை எதிலே நனையப் போடுவது? எதிலே காயப் போடுவது? இது ஒரு சிக்கல்.

பல பேர் கங்கையிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். சில பேர் குமரிக் கடலிலே நனைகிறார்கள்; வெயிலிலே காய்கிறார்கள். இந்த நனைதலாலும், காய்தலாலும் உடலுக்குத் தான் ஏதோ சுறுசுறுப்புக் கிடைக்கிறதே தவிர, உள் உணர்விலே ஒன்றும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆறு மாதம் காசிக்கப் போய்த் தங்கிக்