பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

321


கங்கையில் குளித்து விட்டு வருகிறவன், ஊருக்கு வந்தவுடன் முதலில் கேட்கிறான், நம்முடைய எதிரி என்ன ஆனான்? என்று. அவன் ஒன்றையும் எதையும் மறந்ததாகவும் தெரியவில்லை; மறுத்ததாகவும் தெரியவில்லை. அவனுடைய உணர்ச்சிப் பாங்கில் எந்த மாற்றமும் இல்லை. அவனை எதிலே நனைப்பது? எதிலே காயப்போடுவது: கங்கையிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை; கடல்களிலே நனைவதினாலே மட்டுமே பயனில்லை? என்று அப்பர் அடிகளே-ஏழாம் நூற்றாண்டிலே பாடுகிறார்.

இதற்கும் நான் ஒரு சிறிய உதாரணம் சொல்வதுண்டு. தஞ்சைத் தரணியிலே பிறந்து வளர்ந்தவர்களுக்குத் தெரியும். ஆடித்திங்களில் இரண்டு கரையையும் தொட்டுக் கொண்டு புதுப்புனல் பொன்னி, நுங்கும் நுரையுமாகப் பூவும் புனலுமாக ஓடிக் கொண்டிருப்பாள். இளைஞர்கள் ஓடியாடி, நீந்தி விளையாடுவார்கள். வெள்ளம் வேகமாக இருக்கிற பொழுது, ஒரு நாள் நான் குளித்துக் கொண்டிருந்த பொழுது, காவிரித் தாயைப் பார்த்து, இவ்வளவு வேகமாக ஓடுகிறாயே! என்ன குடி முழுகிப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகத் தான் போனால் என்ன? என்று கேட்டேன். உடனே காவிரி எனக்குச் சொன்ன விடை:

‘தம்பி நாளை மறுநாள் ஆடி அமாவாசை வருகிறது. இந்த ஊர் உலகத்தில் இருக்கிற மனிதர்கள் பாவத்தைச் செய்துவிட்டு, அதைக் கழுவ என்னிடத்திலே வந்து விடுவார்கள். அவர்கள் வருவதற்குள்ளாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஓடுகிறேன் என்று சொன்னது. ஆக, கங்கையும் காவிரியும் மனிதனைக் கண்டு பயப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆதலால், அதிலே நனைவது என்பது அவ்வளவு பெரிய காரியமல்ல. நனைவதினால் தவறில்லை. ஆனால், நனைகின்ற பொழுது எந்த உணர்ச்சி வேண்டும்? கங்கையில் குளிக்கின்ற பொழுதோ காவிரியில் குளிக்கின்ற பொழுதோ, எங்கோ நெடுந்துரத்திற்கு அப்பால்