பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கின்ற வான்மழை, மண்ணைத் தீண்டி மனித உலகத்திற்கு வாழ்வளிக்கின்ற நோக்கத்தில், அது நீர்த் திவலைகளாக மாறி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல என்னுடைய வாழ்க்கை பயன்பட வேண்டும் என்று கருதிக் குளித்தால் தவறில்லை.

அப்படிக் கருதிக் குளிக்காவிட்டால் அதிலே கிடக்கின்ற மீனைப்போல, நண்டைப் போலக் குளித்துவிட்டு வருவதாக ஆகும். மோட்சத்திற்குக் கங்கையிலே, காவிரியிலே குளிப்பதனால் மட்டும்தான் போகமுடியும் என்று சொன்னால், அதிலே கிடக்கிற நத்தைக்கும் நண்டுக்கும் கூட அது கிடைத்திருக்க வேண்டும். அவைகளுக்குப் பகுத்தறிவு இல்லை; சிந்திக்க முடியாது; சிந்திக்கின்ற திறன் கிடையாது.

எனவே மனிதன் அவற்றில் நீராடுகிற பொழுது, எங்கோ உயரத்தில் வானுயர் மலையில் தோன்றுகிற கங்கை, பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, கீழே இறங்கி, மண்ணுலகம் முழுதும் பரவி ஓடி, இருகரையிலும் வாழ்கின்ற மக்களுக்கு வாழ்வளிக்கின்ற பாங்கைப் பார்த்து, அதே போல என்னுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்துக் குளித்தால் கங்கையில் குளிப்பதும் பயன் தரும்; காவிரியில் குளிப்பதும் பயன் தரும். அஃது இல்லையானால், அதில் பயனில்லை. எனவே, மனித உள்ளங்களை எல்லாம் அன்பிலே நனைத்து, தொண்டினால் வருகின்ற துன்பத்திலே காயப் போட்டால், மனிதனும் கொஞ்சம் தேறுவான். ஆக மனித உள்ளங்களையெல்லாம் அன்பிலே நனைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் துன்பம் கூடாது.

ஆனால், துன்பத்தை வரவழைத்துக் கொண்டவனாக இருந்தால் வாழ்த்தலாம்; பாராட்டலாம். இருந்தது; கொடுத்துவிட்டு ஏழையானான். மற்றவர்களுக்காக வாழ்விழந்தான் என்றால் தவறில்லை. ஒரு சிறந்த வாழ்க்கை என்று சொன்னால் ஒரு நல்ல வீணை வாசிப்பதைப் போல.