பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

325


தோட்டங் களை அழிக்காது; நிலங்களை அழிக்காது; காடுகளை அழிக்காது. பொருள்களை எல்லாம் அப்படியே பத்திரமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை மட்டுமே அழிக்கும். உடைமைகள் தோற்றமே மனிதனுக் காகத்தான். கடவுள் இந்த உலகத்தில் பொன்னையும், பொருளையும், போகத்தையும், பழத்திடை சுவையினையும், கனிகளையும், சோலைகளையும் நமக்கு அமைத்துக் கொடுத்தது, இந்த உயிர்கள் தம்முள் மகிழ்ந்து வாழட்டும்; மகிழ்ந்து வாழ்வதின் மூலம் தங்களை உயர்த்திக் கொள்ளட்டும் என்றுதான். ஆனால், இன்றைக்கு நிலைமை, மனிதனைவிட உடைமைகள் மிகப் பெரிய செல்வாக்கு உடையனவாகி விட்டன. மிகப் பெரிய விநோதம், பணத்தை மனிதன்தான் படைக்கின்றான்; பொருளையும் மனிதன்தான் படைக்கிறான். அதற்குப் பெயரும் இவன்தான் சூட்டுகிறான். அதற்கு விலை மதிப்பும் இவன்தான் நிர்ணயிக்கின்றான். ஆனால், துர்ப்பாக்கியவசமாக அவற்றிற்கு எல்லாம் செய்த பின்பும் இவனே அவற்றுக்கு அடிமையாகவும் நிற்கின்றான்.

“பொருளுக்காக நான்” என்று கருதுகிறானே தவிர, ‘வாழ்க்கைக்குப் பொருள்’ என்று அவன் கருதவில்லை. பொருளுடைமையின் காரணமாகவே சில காரியங்கள் நிகழ்கின்றன. அதற்காகவே சண்டைகள், அதற்காகவே போட்டிகள் தோன்றுகின்ற பொழுது, ஆன்மீகத் தரம் வீழ்ந்து விடுகிறது. பொருளுடைமை தவிர்க்க முடியாதது. ஆனால் அது, துய்த்து, மகிழ்ந்து, வாழ்வதற்குத் தானே தவிர, பூட்டுக் கடைகளுக்குள்ளே போய்ச் சிக்க வேண்டும் என்பதற்காக வன்று. உலகத்தில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் மிகவும் செல்வாக்குப் பெற்ற கருவி, சிறைகள்; எங்கு பார்த்தாலும் பூட்டுக்கள், பூட்டுகள் இல்லாத கோயில்களைக் கூடக் காண முடியவில்லை.