பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

333


துன்பத்தை இன்பமென்றுமாக, முறை பிறழ உணர்கின்றோமே, அதற்குப் பெயர்தான் அறியாமை. இதற்குத் தெளிவாக ஒரு சிறு உவமை சொன்னால் நன்றாக விளங்கும். சில ஊர்களிலே, சில கிராமப் புறங்களிலே ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள் இருக்கிறார்கள். உணவுப் பஞ்சத்தின் காரணமாக இப்பொழுது எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது இல்லை என்ற வரையறை நீங்கிக் கொண்டு வருகிறது. எனவே, இந்த ஆமையை அவித்துச் சாப்பிடுகிற மக்கள், ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்து, உலைப்பானையிலே போட்டு, அடுப்பிலே விறகு வைத்துத் தீ மூட்டினார்கள். பச்சைத் தண்ணீரிலே கிடந்து மரத்துப் போன ஆமைக்கு, இளம் சூடு, சிறிது வெது வெதுவென்று இருந்தது. உடனே அதற்கு மகிழ்ச்சி. ‘அடஅட! இளஞ்சூடு எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இதுபோல வெதுவெதுவென்று எங்கும் இல்லையே’ என்று சொல்லி அந்தப் பானை நீரிலே விளையாட ஆரம்பித்தது. ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைபோல்’ என்பார். மிகவும் மகிழ்ச்சி. இந்த இளம் சூட்டிற்கு ஈடு இணை ஏது? ஒன்றை மறந்துவிடக் கூடாது. அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. எட்டு மணிக்கு எரியத் தொடங்கிய அடுப்பு, எரிந்து கொண்டே இருந்தால், இளம் சூடு என்ன ஆகும்? கொதி நிலையாக மாறுகிறது. கொதி நிலையாக மாறுகிற பொழுது, அந்த ஆமை அழிந்து போகிறது.

அதேபோல, எது நிலையான நன்மை தரும், எது நெடிய பயன் தரும் என்று அறிந்து கொள்ள முடியாமல், இந்தத் தற்காலிகமான வெற்றிகள், இன்பங்கள் இவைகளிலேயே மயங்கி, அதிலேயே மூழ்கி, கடைசியிலே அதுவே நம்மை அழிக்கின்ற அளவுக்கு அழித்துக் கொள்கிறோம். அதனால்தான் ‘உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில் நின்றாடுநின்ற ஆமைபோல் தெளிவில்லாதவன்’ என்று