பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொன்னார். ஆக, சிந்தையுள் தெளிவுமாக, தெளிவினுள் சிவமுமாக இருக்கின்ற பரம்பொருளை நாம் நினைக்கின்ற பொழுது, நம்முடைய அறிவு இன்னும் தெளிவுடையது ஆகின்றது. சில பேர் தீமையைத் தாமே செய்து கொள்ளுகிறார்கள். ஆனால், யார் மீதாவது பழிபோடுகிறார்கள். இந்த மனிதன் மிகவும் கெட்டிக்காரன்; எதற்கும் சமாதானம் சொல்வதில் இவனைவிடக் கெட்டிக்காரன் யாருமிலர். அதுவும் நம்முடைய சமூகத்தில் சமாதான நிபுணர்கள் அதிகம். சமாதான நிபுணர்கள் என்றால் சண்டைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்பவர்கள் என்று இல்லை. கீழே விழுந்து விட்டால் அதற்கொரு சமாதானம். ஏதாவது சொல்லித் தன்னுடைய குறைகளை நிறைகளாக மாற்றுபவர்களுடைய எண்ணிக்கை மிகுதி. எனவே, தெளிவாக நம்முடைய அப்பரடிகள் சொல்லும்போது சொல்லுகிறார். ‘அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாதே’ என்று. யானை மிகப்பெரிய யானை. அந்த யானைக்குத் தன் உடல் முழுதும் தெரிந்து கொள்ளுகின்ற சக்தி உண்டா? இல்லை பார்வையே இப்படித்தான். அதற்குத் தன் முதுகு, வால், எப்படி இருக்கின்றன: வயிறு எப்படி இருக்கிறது என்று தெரியாது; பார்க்க முடியாது. அதுபோல், சிலபேர் இருக்கிறார்கள். அவனைப் பற்றியே அவனுக்குத் தெரியாது கேட்டாலும் பெயர் ஊர் சொல்லுவானே தவிர, வேறு ஒன்றும் தெரியாது. சரி, தனக்கு மேலே ஒரு தலைவன், கடவுள் இருக்கிறானே, தெரியுமோ? தெரியாது. யானைக்கு மேலே யானைப்பாகன் ஒருவன் இருந்து யானையைச் செலுத்துகிறானே, யானைக்குத் தெரியாது. அதுபோல, தனக்கு மேலே ஒரு தலைவன் இருக்கிறான்; கடவுள் இருக்கிறான் என்பதும், இவனுக்குத் தெரியாது. மிஞ்சினால் இல்லையென்று சொன்னாலும் சொல்லி விட்டுப் போய் விடுவான். அதற்கு ஏன், என்ன காரணம் என்று கேட்டால் பார்த்தால் தானே நம்பலாம் என்கிறான். கண்ணால் பார்க்க வேண்டும். அது ஓர் ஆசை.