பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைந்தவை. திருவள்ளுவர் ‘சாதி’ என்ற சொல்லை வழங்கினாரில்லை. ஆனால், குலத்தின் பெருமையைப் பலபடப் பேசுகின்றார். இன்று நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஆட்சி செய்வது சாதிமுறையேயாம். மேலும், சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஊடுருவி அழித்து வருவது சாதி வேற்றுமையும் அவ்வழிப்பட்ட பகைமை உணர்ச்சியுமேயாம். ஒருவர் தம்மை இந்துவாகவோ சைவாாகவோ வைணவராகவோ இன்று எண்ணிப் பழகவில்லை. சாதி வழியில்தான் அவர் சிந்தனை வளர்கிறது; பற்று வளர்கிறது; பாசம் வளர்கிறது. இங்ஙனம் சாதி வேற்றுமை பாராட்டுகிறவர்களைக் கடிந்து கூறாத அறநூல் எதுவுமில்லை.

“சாதி குலம்பிறப்பெனும் சுழி”[1] என்று திருவாசகம் கூறும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”[2] என்று திருமந்திரம் கூறும். இங்குக் குலம் என்பது வழிபடும் தெய்வத்தை மையமாகக் கொண்டமைவது. எல்லோரும் அந்த உயர்ந்த குலத்தில் பிறவாமற் போனாலும் எல்லோரும் அந்தக் குலத்திற்குரிய வராக்கப்படவேண்டும் என்பதே உண்மை. அத்தகைய உயர்ந்த பணிகளைச் செய்யத்தானே சமய நிறுவனங்கள் தோன்றின? சாதி வேற்றுமையை அகற்றி நமது சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம். ஆதலால்தான் இறைவன் தானே முன்னின்று சுந்தரர் வரலாற்றில் கலப்புத் திருமணங்களைச் செய்து வைக்கிறான். சுந்தரர் வரலாறு திட்டமிட்ட வரலாறு. அந்த வரலாறு கயிலையில் தோன்றி மண்ணில் நிகழ்கிறது. ஆதலால் சுந்தரர் வரலாற்றில் நிகழ்வன அனைத்தும் தற்செயலாக அமைந்தனவல்ல; சுந்தரர் மட்டும் விரும்பி மேற்கொண்டதும் அல்ல. நமையாளும் சிவபெருமான் விரும்பித் திட்டமிட்டு நிகழ்த்திய அருள் விளையாட்டே. ஆலால சுந்தரரை ஆதிசைவர் குலத்தில் பிறக்கவைத்து, ஆதிசைவரல்லாத குலத்தில் வளரவைத்து, கமலினி, அநிந்திதை எனும் மங்கையரை முறையே கணிகையர்,

  1. திருவாசகம், கண்டபத்து, 5
  2. திருமந்திரம், 2066.