பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

337


அவன், கங்கையெனக் காவிரியெனச் சுரக்கின்ற அறிவூற்றுக்கள், மின்னாற்றலை விட மிகச் சிறந்த ஆற்றல், உடலிடை வாழ்கின்ற பல்வேறு அமைப்புகள், இவ்வளவையும் நமக்கு வழங்கிய பிறகும் கூட, பிச்சைக்காரனாக அவனுடைய சந்நிதியில் போய் மனிதன் நிற்கிறான். அது இந்த நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, அவனுடைய அமைப்புப்படி, குறிக்கோள்படி, மனிதன் தன்னுடைய தலைவனை உணர்ந்து, அவனால் இந்த உலகம் இயங்குகிறது; அவன் எனக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் வழங்கி இருக்கின்றான் என்று நன்றியறிதலோடு மட்டுமல்ல. அவனுடைய குறைவற நிற்கின்ற அறிவை, ஆற்றலை இந்த உயிர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுளை வழிபாடு செய்தாலும் கூட, அந்த வழிபாட்டின் பலன் கடவுளுக்குப் போய்ச் சேருவதில்லை. வழிபாட்டின் பயன் உயிர்களுக்குத்தான் சேர வேண்டும். அது நியதி! அதுதான் குறிக்கோள். கரும்பலகையில் எழுதினால்கூட, கரும்பலகையில் எழுத வேண்டும் என்பது நோக்கமல்ல. கரும்பலகையில் எழுதுவதின் நோக்கம், என்னுடைய சிந்தனையில் எழுதிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதே போல இறைவனை முன்னிட்டு வழிபாடு செய்தாலும், அந்த வழிபாட்டின் பயன் இந்த உயிர்களை வந்து அடைய வேண்டும். அவனை அறிவுடையோன், ஞானமுடையோன், பேரறிவுடையோன் என்று தொழுவதன் மூலமாக, இந்த உயிர் பேரறிவுடையதாக விளங்க வேண்டும். இறைவனுடைய குணங்களும், நிறைகளும், அவனுடைய அருள் நலங்களும், உயிரில் வந்து தங்குதலுக்குத்தான் வழிபாடு என்று பெயர். அதற்குத் தான் அந்த நெறியில் நிற்றல் என்று பெயர்.

அந்த யானை தன்னுடைய தலைவனையும் தெரிந்து கொள்ளாது. அதுபோல இவனும் தெரிந்து கொள்வதில்லை. யானையை எங்காவது கட்டினால் போதும், உடனே