பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

341


நோக்கம் அல்ல. தமிழில் அர்ச்சனை செய்தால் எதிரே இருக்கின்ற மக்கள் மகிழ்ந்து கேட்பார்கள். செவிப்புலன் வாயிலாகச் செய்திகள் போய்ச் சேருகின்றன. அந்த இறைக் குணங்களைச் சிந்திப்பார்கள். அவற்றோடு ஒன்றுவார்கள்; உணர்வார்கள்; அந்தக் குணங்கள் அவர்களுக்குச் சொந்தமாகும். அது தமிழில் வழிபடுவதால் ஏற்படும் ஒரு பயன் என்பதை மறந்து விடக்கூடாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொன்னால் கூட நன்றாகப் புரியும் என்று எண்ணுகிறேன். பயணியர் மாளிகையிலே ஒரு சுவர்க் கடிகாரம் இருக்கிறது. இரவு பன்னிரண்டு மணிக்கு அந்தப் பயணியர் மாளிகைக்குப் போய்ச் சேருகிறேன். கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஓசை கேட்டது. மணி பன்னிரண்டு என்று! சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, திரும்பப் பயணம் செய்யலாம் என்று எழுந்து பார்க்கிறேன். முள் பன்னிரண்டிலேயே நிற்கிறது. ஆனால், பெண்டுவம் ஓடி ஆடி ஓசை செய்கிறது. ஓடுவதையும் கண்ணால் பார்க்கிறேன். ஆனால் முள் பன்னிரண்டிலேயே இருக்கிறதே என்று காவற்காரரை அழைத்து என்ன அய்யா’ என்று கேட்டால், கொஞ்ச நாளாக இந்தக் கடிகாாம் ஓடுதுங்க, ஆனால் முன் நகரவில்லை என்று சொன்னா அதேபோல நாட்டில் வழிபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன: வாழ்க்கை நெறிகளிலே மட்டும் நகர்த்தத் தவறி விடுகிறோம். காரணம், நம்முடைய இதயத்தில் அதனுடைய உணர்வுகள் பதிவதில்லை.

எனவே, தாய்மொழியில் அர்ச்சனை செய்தால், ‘அப்பன் நீ, அம்மை நீ’ என்று சொல்லுகிறபொழுது நம்மை அறியாமல் கடவுளை நம்முடைய வாழ்வுப் பொருளாகக் காண்கிறோம். கடவுளை நம்முடைய வாழ்த்துப் பொருளாக மட்டுமின்றி, வாழ்வுப் பொருளாகவும் காண்கின்ற ஒரு பண்பாடு வளர்கின்றது. அப்பனாக இருக்கிறான்; அம்மையாக இருக்கிறான்: அன்புடைய மாமனாக இருக்கிறான்;