பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாமியாக இருக்கிறான். ஓரூராக இருக்கின்றான்; சுற்றமாக இருக்கின்றான்; பொன்னாக இருக்கிறான். மணியாக இருக்கின்றான்; முத்தாக இருக்கிறான். என்று சொல்லுகிற பொழுது, மனிதனுக்கு வாழ்க்கை நிகழ்வுகளோடு அந்த உணர்வு நகர்த்தப்படுகிறது. அப்பொழுதுதான் வழிபாட்டினுடைய பயன் அவனுக்குத் தித்திக்கிறது. தான் செய்கிற வழிபாடு எந்த மொழியில் செய்தாலும் கடவுளுக்குப் போய்ச் சேரும். கடவுளுக்கு மொழி வேறுபாடு இல்லை.

ஆனால் நமக்குத் தேவை நம்முடைய இதயம் அழ வேண்டும். நம்முடைய உயிர் அழ வேண்டும். மனிதனுடைய இருதயம் ஊமையாக இருந்தாலன்றி, கடவுள் செவிடாக இருப்பதில்லை என்று சொல்லுவார்கள். நம்முடைய இதயத்தில் ஊமைத் தன்மை இல்லாமல் இறைவனை நோக்கி அழக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்கு அழுவதற்கு உரிய மொழி தாய்மொழிதான். எவ்வளவுதான் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தாலும், எவ்வளவுதான் பிறமொழிகளிலே மேம்பட்ட அறிவு பெற்றிருந்தாலும், அவனுக்கு ஒரு விபத்து என்று அழுகிறபோது, அவனுக்குத் தாய்மொழி துணை செய்வதைப் போல, எந்த மொழியும் துணை செய்யாது. இதற்கும், காதல் செய்வதற்கும் தாய்மொழியைத் தவிர வேறு மொழி துணையே இல்லை. மொழி வேறுபாடு இருந்தாலும் காதல் தோன்றுகிறது என்று சொல்லலாம். அது காதலாக இருந்தாலும் கனிவாக, பழக்க வழக்கமாக உருப்பெறுவது சிறிது கடினம் என இருக்கும். அப்புறம் இவர் அந்த மொழியைக் கற்றக் கொடுக்கும் ஆசிரியராக மாறி, பக்குவப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.

எனவே, ‘யானும் பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்று சொன்னார்கள். அழுவதற்கு உரிய முயற்சி, அதுவும் அன்பு அழுகை, ஆர்வ அழுகை; பேரறிவு,