பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

351


கண்டது. தொல்காப்பியர் காலந்தொட்டு நம்முடைய மொழி வளர்ந்த மொழி. தொல்காப்பியம் இலக்கணம் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் சாதாரணமாக, மொழி வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். இலக்கியத்திற்கு இலக்கணம் செய்வார்களே தவிர, இலக்கணத்திற்கு இலக்கியம் செய்கிற பழக்கம் இல்லை என்று. ஆக, இலக்கணம் தோன்றுவதற்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு ‘செழுந்தமிழ்’ இலக்கிய மரபு தமிழில் தோன்றி மலர்ந்திருக்க வேண்டும்.

தமிழனுடைய வரலாற்றுத் தொன்மை மிகப் பன்னெடும் நாட்களுக்கு அப்பால் செல்கின்றது. கடல் கொண்ட, குமரி நாட்டில், மதுரை நகரத்தைப் போன்ற மிகப் பெரிய திருக்கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல் தமிழ்ச் சங்கமே இன்றைக்கிருக்கும் மதுரையில் இருந்ததன்று. முதல் தமிழ்ச் சங்கம் கடல் கொண்ட தென்குமரி நாட்டில் நடந்தது. அந்தத் தென்குமரி நாட்டில் பல்யாகாசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் ஒருவன் ஆண்டிருக்கிறான். அவன் வேறு யாருக்கும் தாழாதவன்; எந்த அரசுக்கும் தாழாதவன் ஆனால், சங்கச் சான்றோர்கள்-முது தமிழ்ப் புலவர்கள் அவனுடைய குடையைப் பார்த்து, ‘யாருக்கும் உன்னுடைய குடை தாழாது போனாலும், முக்கட் செல்வன் நகர்வலம் செயற்கு உன்னுடைய குடை தாழ்க’ என்று சொன்னார்கள். ஆக, எங்கும் தாழாத கொற்றக்-குடைகள்-வெற்றிக் குடைகள், எங்கும் தாழாது இருக்கின்ற முக்கட் செல்வனாகிய சிவபிரான் திருக்கோயில் முன்னாலே தாழ்ந்தன என்று சங்க இலக்கியம் பேசுகிறது. எனவே, தமிழர் வாழ்வோடு ஒட்டி வளர்ந்தது சமயம் தமிழோடு வளர்ந்து நின்றது சமயம் என்பதைத் தயவு செய்து மறந்து விடக் கூடாது. ஆகவே என்றைக்குத் தமிழிலிருந்து சமயத்தைப் பிரிக்கிறோமோ, அல்லது சமயத்திலிருந்து