பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

355


பெரிய வாழ்க்கை. அதே மாதிரி சாதனையை மனிதனும் முயன்றால் செய்ய முடியும்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்பது திருக்குறள்.

எதிரே ஒருவர் இருக்கிறார். நட்டவன் போல இருக்கிறார். நண்பர் போல இருக்கிறார். பழகினவராக இருக்கிறார்; அவரே கொண்டு வந்து நஞ்சை வைக்கிறார். அது நஞ்சு என்றும் தெரிகிறது. திருவள்ளுவரைப் பார்த்து, “இவர் நஞ்சை வைத்திருக்கிறாரே! அதுவும் என்னோடு பல காலம் பழகிய நண்பர் பெருமாள் வைத்திருக்கிறாரே! ஒருங்கிணைப்புச் செயலாளர் வைத்திருக்கிறாரே, குடிக்கலாமா? வேண்டாமா?” என்று திருவள்ளுவரைக் கேட்டால், ‘குடி’ என்று சொல்லுகிறார். ‘நீ நஞ்சைக் குடி, நீ நிச்சயமாகச் சாகாமல் வாழ்வாய்’ என்று சொன்னார். என்ன? என்று கேட்டால் விளக்கம் சொல்லுகிறார். உலக நாடுகளிலே கிரேக்க நாட்டிலே அறிவு தோன்றியது. ‘அறிவினாலே சிந்தித்துப் பார்’ என்று சொன்னான் கிரேக்க அறிஞன். ‘எதையும் கண்மூடித் தனமாகச் செய்யாதே. அறிவினால் ஆய்ந்து செய்’ என்று சொன்ன ஒரே குற்றத்திற்காக அன்றைக்கிருந்த முட்டாள் உலகம், அந்த அறிஞனுக்கு உலக மேதைக்கு நஞ்சைக் கொடுத்துச் சாகடித்தது. அவன் பெயர் சாக்கரடீஸ் - கேள்விப்பட்டிருப்பீர்கள். அவனுக்கு நஞ்சு கொடுத்தபொழுது, அவன் நஞ்சை வாங்கிக் குடித்தான். தைரியமாகக் குடித்தான்; பண்பாட்டோடு குடித்தான்; ஆனால் செத்துப் போனான். ஆனால், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் அப்படி ஒரு ஞானத் தலைமகனுக்கு நஞ்சு கொடுத்தது அந்த நாடு. ஏழாம் நூற்றாண்டில் இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தில் ஒரு ஞாயிற்றொளி நடமாடியது. அந்த ஞாயிற்றொளி நடமாட்டத்தினால், அந்த நாடு