பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்றார். எல்லா நாடுகளிலும் இருக்கின்ற மக்களுக்கு அவன்தான் தலைவன். அவன்தான் கடவுள், யார் யார் எந்தெந்த மொழியில் பேசுகிறார்களோ, அவரவர்களுக்கு அதுதான் கடவுளோடு பேசுகிறமொழி. நமக்குக் கடவுளுக்கு எந்த மொழி தெரியும் என்பது பிரச்சனையல்ல; நாம் எந்த மொழியில் கடவுளுடன் பேச முடியும் என்பதுதான் பிரச்சனை. கடவுள் அனைத்து மொழிகளுக்கும் சொந்தக்காரன்; அனைத்து மொழிகளையும் உணர்ந்தவன்; தெளிந்தவன்; தெரிந்தவன். அவனே எல்லா மொழிகளாகவும் இருக்கிறான். எனவே அவனுக்கு எந்த மொழி என்பது சிக்கல் அல்ல. நமக்கு எந்த மொழியில் சொன்னால் கடவுள் எளிதாகக் கிட்டுவான்? நாம் அழவேண்டும், நாம் கசிந்துருக வேண்டும். நம்முடைய நெஞ்சு என்ற புலன் உழப் பெற வேண்டும். நம்முடைய இதயப் புலன்கள் உழப்பெற வேண்டும். அதற்கு எந்தச் சொல், எந்தமொழி இசைந்தது? என்பதுதான் பேச்சு. இதைப் பத்தாம் நூற்றாண்டிலேயே சுந்தரர் வரலாற்றில் காணலாம். அங்கேயும் சொல்கிறேன். அயல்மொழி வழக்கு நுழைந்திருக்கிறது என்பதை அயல்மொழி வழக்கைக் காட்டி, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சுந்தரர் வாழ்க்கையிலே சிவபெருமான் கூறுகிறார். ஆக, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சொல்லுகிறவர் 'தூமறை பாடும் வாயார்' என்று சொன்னார் சேக்கிழார் பெருமான். ஆக மறைகள் இருக்கின்றன. அந்த மறைகள் எவையாயினும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய நெஞ்சு பக்குவமடைகிற மாதிரி, உறுதியடைகிற மாதிரி, நல்ல தமிழில் பாடுக என்று சொன்னார். நான் இவ்வளவு செய்திகளும், தமிழில் கொண்டு வந்தார் என்று நண்பர் பெருமாள் அவர்கள் சொன்னதற்கு விளக்கம் சொன்னேன். தமிழ்வேறு சமயம் வேறல்ல, இரண்டும் ஒன்று தான்.