பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பூட்டுகிறேன். சமயமும், சமுதாயமும் என்பது நாமாகச் செய்யக்கூடிய முயற்சிகள் அல்ல. இடைக்காலத்திலே மறந்துபோன ஒன்றை நான் நினைவுபடுத்துகிறேன். அவ்வளவுதான். பழங்காலத்தில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னால், அங்குக் கடவுளைத் தொழ முடியாது என்பது மட்டுமல்ல; உன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்காது; பாதுகாப்பு இருக்காது; நியாயம் கிடைக்காது; நீதி கிடைக்காது; எனவே, கோயிலைச் சார்ந்து வாழ் என்பதுதான். இது இன்று நேற்றுத் தோன்றிய பழக்கமல்ல. பல்லாயிரம் ஆண்டுக் காலத்துப் பழக்கம். இதனைச் சேக்கிழாருடைய பெரிய புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் நாம் பரக்கக் காணமுடிகிறது.

அதற்குச் சில சான்றுகள் சொல்லுகிறேன். இப்பொழுது சாதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் ஆக வேண்டும். வயது வந்த இளைஞனாக இருக்கின்றான். அவனுக்கு வீட்டிலே திருமணம் செய்து வைக்கின்ற முனைப்பைக் காணோம். பெற்றோர் ஒரு மாதிரியாகக் காலம் கடத்துகிறார்கள். பையனுக்கோ வயது வந்துவிட்டது. காதல் உணர்வு வந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வார்கள்? எங்கேயாவது கடை வீதிகளிலே புறத்திலே போய்ச் சுற்றுவார்கள். ஆனால், சுந்தரர் போன்ற இளம் தலைமுறையைச் சார்ந்தவர்கள், சிவபெருமானிடத்தே போகிறார்கள்; திருக்கோயிலுக்குச் செல்லுகிறார்கள். அங்கே போய்ச் சிவபெருமானிடத்தும் கேட்கிறார்கள். ‘எனக்குத் திருமணம் செய்து வை’ என்று. திருமணம் செய்து வை என்று கூட இறைவனிடத்திலே கேட்கக் கூடிய ஓர் உரிமை நம்முடைய சமயத்திலே இருந்தது. சமூகத்தைச் சேர்ந்த மனப்பக்குவம் பக்தர்களுக்கு இருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.