பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

365


அது மட்டுமா? திருமணம் ஆகிவிட்டது. மனைவிக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டு விட்டது. தகராறு வந்து விட்டது. கேட்டால் எந்தக் காலத்திலும் பெண்கள் அடக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஒரு திருமணத்திலேயே மிகப் பெரிய மன நிறைவை அடைவார்கள். வாழ்நாள் முழுவதும் அந்தக் கணவனுக்கே தொண்டு செய்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், ஆடவர்கள் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. பல ஆடவர்கள் கொம்பு மாறுகிற பழக்கம் உடையவர்கள். கொஞ்சம் வெளியேயும் புறத்தேயும் சுற்றி வருவார்கள். கோவலன் வாழ்க்கையைப் பார்க்கிறோம். பல்வேறு வாழ்க்கையைப் பார்க்கிறோம். அதேபோல சுந்தரருக்கும் கூட இரண்டாவது திருமண ஆசை வந்து விடுகிறது. அவர் திருவொற்றியூருக்குப் போகிற போது அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விழைவு தோன்றுகிறது. ஆனால், தயவு செய்து மறந்து விடாதீர்கள். முதல் திருமணம் செய்வித்த சிவபெருமான் மூலமாகவே இந்தத் திருமணத்தையும் செய்து கொள்கிறார். இப்பொழுதெல்லாம் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமென்று சொன்னால், முதல் திருமணம் செய்து வைத்த சண்முகவேலுக்குத் தெரியாமல், தாமாகப் போய்க் கோலாலம்பூரில் பதிவு செய்து கொண்டு வந்து விடுவார்கள். சிவபெருமானைப் பொறுத்த வரையில் சுந்தரர் அப்படிச் செய்யவில்லை. சிவபெருமானிடமே போகிறார். அந்தக் காலத்திய சமூக வழக்கத்தில், இரண்டு தடவை திருமணம் செய்து கொள்வது தவறில்லை என்ற நாகரிகம் இருந்தது. பரவையின்பால் சிபபெருமானுக்கு இருக்கிற ஈடுபாடும் குறைவல்ல. என்ன செய்வது? அவருடைய தலைவிதியே என்று திருமணம் செய்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. சுந்தரருடைய பழைய மனைவிதானே! சங்கிலியாரையும் போய்ச் சமாதானம் செய்து திருமணம் செய்து