பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருகிறது; இரக்கமும் வருகிறது. கோயிலைவிட்டு வெளியில் வந்து அந்த மரத்தடியில் நின்று கொள். சத்தியம் செய்தபின் கோயிலுக்குள் போய்விடு’ என்று சொல்லுகிறார். சிவபெருமானுக்குச் சுந்தரருடைய வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த அம்மை யாரை “ஏமாற்றுவது போல் ஆகிவிடக் கூடாதே! அங்கே போய்ச் சொல்லிக் கொடுத்து விடுகிறார். ‘இந்தச் சின்ன விசயத்திற்குக் கோவிலுக்குள் சத்தியம் வேண்டாம்; இந்த மரத்தடியிலே செய்தால் போதும் என்று கேள்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு நமது குறைகளுக்கும், நிறைகளுக்கும் ஈடு கொடுத்து நின்ற ஒரு சமயம், இன்றைக்கு வெறும் சடங்குச் சமயமாக, வாழ்க்கையோடு இசைந்து வராத, ஒத்துவராத, வாழ்க்கையாகவே ஆக்க முடியாத ஒரு சமயமாக இருக்கிறதே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்புறம், சுந்தரர் சத்தியம் செய்கிறார்; மரத்தடியில் சத்தியம் செய்கிறார்; பிறகு கண் போகிறது; கண்ணைப் பறித்து விடுகிறார் சத்தியத்திற்காக! அப்பொழுது என்ன திட்டுத் திட்டுகிறார்? நாம் வீட்டிலே குறும்பாக இருக்கிற குழந்தையைப் பார்த்து ‘என்ன சனியனே!’ என்று சொல்லுகிற மாதிரி, கடவுளிடத்துப் போய், ‘மகத்தில் புக்கதோர் சனியெனக்கு ஆனாய்!’ என்று கூறுகிறார். சிவபெருமான் இவ்வாறு பேசவும் உரிமை கொடுத்தார்; வாழ்த்தவும் உரிமை கொடுத்தார்; வேலை வாங்கவும் செய்தார்; வேலை செய்யவும் செய்தார். அதுதான் நம்முடைய சமயம்; நம்முடைய சமுதாயம் நாம் ஒன்றும் சமயத்தைக் கொண்டு போய்ச் சமுதாயத்தோடு செயற்கை முறையில் இணைக்க ஆசைப்படவில்லை. அப்படி ஒரு காலத்தில் இருந்தது. பொன் வேண்டுமா? கேட்டார்! சாப்பாடு! நல்ல நெய் போட்ட கறியோடு கூடிய சாப்பாடு வேண்டும் என்று கேட்டார்! கடவுளை வாழ்க்கைப் பொருளாகப் பார்த்த, கடவுளை வாழ்த்துப் பொருளாகப்