பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எழுந்தருளி இருப்பதாக நம்மில் பலருக்கு நினைவே வருவதில்லை. மனிதன் அங்கு அட்டகாசம் செய்கிறான்; மனிதனுக்கு மரியாதைகள், சிலருக்கு ஏகபோகமான மரியாதைகள்; இறைவனுடைய சன்னிதியில் எல்லா மனிதர்களும் அடக்கம் உடையவர்களாக, அமைதி உடையவர்களாக, இருக்க வேண்டும். அந்த இடத்திலே கூட மனிதர்களுக்கிடையில் சமரசமும், சமாதானமும் வராது போனால், வேறு எங்கேதான் வருவது?

நான் கூட அடிக்கடி நினைப்பதுண்டு. இந்தக் கடவுளுக்குக் கண்ணப்ப நாயனாருக்குப் பிறகு நன்றாக, சுவையான உண்வைச் சமைத்துக் கொடுத்தவர் யாருமே இலர் போலும். கண்ணப்பர் நன்றாக, கவனமாகச் சமைத்துக் கொடுத்தார். நம் வீட்டில் கூட சுவாமிக்குப் படைக்கின்ற அன்றைக்கு, சுவைத்து விட்டுப் படைக்க நமக்கு மனம் வராது. அது உப்பில்லாத வடையாக இருந்தாலும் வைத்துப் படைத்து விட்டுப் பிறகு நாம் உட்கார்ந்து சாப்பிடும்போது, ‘அய்யய்யோ! உப்பு சேர்க்க மறந்து விட்டோமே! என்று சொல்லி, திரும்பவும் உப்பு சேர்த்துச் சாப்பிடுவோமே தவிர, கடவுளுக்கு உப்பில்லாதவைதான் கிடைத்திருக்கும். ஆனால், கண்ணப்பர் என்ன செய்தார்? அவர் புலால் தின்கிறவர், அவர் புலாலைப் பதமாகச் சுடுகிறார்; தேனில் நனைக்கிறார்; வாயில் போட்டு அதுக்குகிறார்; சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. அந்த இடத்தை நாம் மிகவும் கூர்மையாகப் பார்க்க வேண்டும். சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. சுவையை அனுபவித்து விட்டால் எச்சில்! சுவை இருக்கிறதா என்று உணருகிறார்; உடனே துப்புகிறார் இலையில்! கடவுளிடத்துப் போய், நான் மிகவும் நன்றாகச் சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதுபோல உனக்குக் கிடைத்தே இருக்காது. இந்தா, சாப்பிடு’ என்கிறார்.