பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வீட்டில் ஏழு பெண்கள். இந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய முறை உடைய மாமன் ஒருவன். இந்த மாமன் இங்கேயே பெண் கேட்கிறான். ஆனால், மாமனுக்குக் கொஞ்சம் வசதிக் குறைச்சல். இப்பொழுது பெண் கொடுக்கவோ, பெண் வாங்கவோ, பெரும்பாலும் வசதியைத் தான் பொதுவாகப் பார்க்கிறோம். பழைய காலத்தில் குலம் அறிந்து கோத்திரம் அறிந்து கொடு என்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடிவதில்லை. அதுவும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், பெண்களிடத்திலே பணம் வாங்குகிற அளவுக்கு ஆண்கள் இளைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கெல்லாம் ஆண்மையும் வலிமையும் மிகக்குறைவாகப் போய், பெண்களிடத்திலே பணம் கேட்கிறார்கள். இந்த மாமனுக்குப் பெண் கொடுக்காமலே மாறி, மாறி வேறு வேறு இடங்களிலே வணிகன் தன் மகள்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறான். இவனும் அங்கேயே எப்படியாவது, ஒரு பெண் கூடக் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறான், கடைசிப் பெண்தான் மிச்சம். அப்பொழுதும் தகப்பனிடத்தில் மாமனுக்குக் கொடுக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இரக்கமான குணம்! நம்முடைய மாமன். நம்முடைய வீட்டிலேயே பெண் எடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறான். நம்முடைய தந்தையோ மோசடி செய்கிறார். நாம் அந்த மாமனுக்கு வாழ்க்கைப் படாது போனால், அவனுடைய வாழ்க்கை கெட்டுப் போகும் என்று எண்ணி, தன்னுடைய பெற்றோரை மீறி, தன்னுடைய மாமனுக்கு ஆள் அனுப்பி, நாம் இருவருமாகச் சேர்ந்து எங்கேயாவது போய்த் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொல்லி விடுகிறான். மாமனுக்கு மிக்க மகிழ்ச்சி.