பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மகிழ்ச்சியைப் பார்க்கிறார். அதற்குப் பிறகுதான் இறைவுனை வணங்கச் செல்லுகிறார். இப்படியோர் உயிர்ப்புள்ள சமயம் நம்முடைய நாட்டிலே இருந்தது என்பதை இன்றைக்கு நாம் மறந்து விட்டோம். சமயத்தையும், சமுதாயத்தையும் யாரோ புதிதாகச் செயற்கையாகப் படைக்க நினைப்பதாக நினைத்து விடக் கூடாது. அது பழைய காலத்தினுடைய தொன்மையான வழக்கம்.

நம்முடைய நாட்டில் சுந்தரருக்கும், சிவபெரு மானுக்கும் இடையில் ஒரு வழக்கு வந்தது. இந்த வழக்கை எங்கே போய்ச் சொன்னார்கள்? (Privy Counsil) தனி ஆலாசனை சபைக்கா? போனார்கள்? உயர்நீதிமன்றத்து (High_Court)க்கா போனார்கள்? இப்பொழுது தமிழ்நாட்டிலே கோயில்களும், மடங்களும் கூட (High Court)க்குப் போய்க் கொண்டிருக்கின்றன. சுவாமிகள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். எந்த யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதற்கு: ‘இசுமாயில்’ நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். ஆனால் நம்முடைய பழைய சமயத்தில், பழைய சமுதாயத்தில் கோயிலிலே இருந்த முறை மன்றத்தில், சிவபெருமானும், சுந்தரரும் சமபாத்திரமாய் இருந்து வழக்கு நடத்தினார்கள். ஆக, வழக்குத் தீர்க்கின்ற அளவுக்குக் கூட நம்முடைய கோயில்கள் சமூக மன்றங்களாக இருந்தன. எனவே சமயமும் சமுதாயமும் ஒன்றுதான். பழைய காலத்தில், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னது அந்தப் பொருளில்தான். சாதாரண பன்றி பட்டினியாகக் கிடந்தாலும், தாய்ப் பன்றியாக வந்து பாலூட்டி வளர்த்தான் நம்முடைய இறைவன் என்பது வரலாறு, அவைகளையெல்லாம் நாம் பொய்யாக்கக் கூடாது; புனைந்துரையாக்கக் கூடாது.

இன்றைக்கு நான் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லுகிறேன். என்றைக்குப் புராணங்கள் அல்லது