பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

375


தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் செயற்பாடாக வரவில்லையோ, என்றைக்கு அவற்றிற்குச் செயல் உருவங்கள் வரவில்லையோ, அன்றைக்கு அவற்றைப் பொய்ம்மை என்று சொல்லுகின்ற ஒரு வட்டம் தோன்றத்தான் தோன்றும். அதைப் பொய்ம்மை என்று சொல்லுகிறவர்கள் மீது நமக்கு வருகின்ற கோபத்தைவிட, அவை என் உண்மையாக நடைமுறைக்கு வரவில்லை; அவைகள் ஏன் நம்முடைய சமுதாயத்தை ஈர்த்துப் பிணைத்துக் காப்பாற்றவில்லை? இன்றைக்கு ஏன் ஏராளமான பேர் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டும். ஆண்டுதோறும் திருக்கோயிலிலே திருமணம் என்று சொன்னால் அது எதற்காக? இறைவனுக்கா திருக்கல்யாணம்? திருமணம் செய்து வைப்பது நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்கட்டும். இறைவன் வழங்கிய ஐம்பொறிகளுக்கு நீ துணையாக இரு. அவன் ஒரு வகையில் படைக்கிறான். நீயும் ஒரு வகையில் படைத்துக் காப்பாற்று, என்ற தத்துவங்களின் அடிப்படையில்தான் இந்த வரலாறுகள் தோன்றுகின்றன.

எனவேதான் புராணங்கள் பொய் என்று சொல்லுகிறவர்களைப் பற்றியோ, கடவுள் இல்லை என்று சொல்லுகிற வர்களைப் பற்றியோ நான் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. காரணம், அவர்களைவிடக் கடவுள் இருக்கின்றார் என்ற தத்துவத்தை நம்புகிறவன். நடமாடுகின்ற உயிர் வர்க்கத்தின், அழுகின்ற கண்ணீரை மாற்றி, துன்பத்தை மாற்றி, தொல்லைகளை மாற்றி, சமூகத்தை ஒருமைப் பாடுடையதாக மாற்றி எந்த மனிதன் இந்த மண்ணுலகத்திலே, விண்ணுலகைப் படைக்கின்றானோ, அவன் தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறவனாக இருக்கிறான். நான், ஒன்று இருக்கிறது என்று நம்பினால் போதாது. நான், அந்த நம்பிக்கையினுடைய மனச்சாட்சியாக இருக்க வேண்டும். அது என்னுடைய உணர்வாகவும் அறிவாகவும் இருக்க வேண்டும். அதுவே என்னுடைய ஒழுகலாறாகவும்