பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

379


ஆனால், பேசாமல் வாழ்ந்தார்கள் என்றால் சண்டை போடவில்லை. அந்தக் காலத்தில் கணவன், மனைவிக்கு இடையில் கருத்துப் பிணக்கு என்று சொன்னால், பக்கத்து வீட்டுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். பேச்சுதான் இருக்காது; உறவுதான் இருக்காதே தவிர, வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டே இருக்கும். அப்படி ஒரு குடும்பம் வாழ்ந்தது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அது திருநீலகண்டருடைய வீடு, கணவனுக்கும், மனைவிக்கும் பிணக்கு. குமரனும் குமரியுமாக இருந்த காலத்தில் பிணக்கு. கிழவனும், கிழவியுமாகிற வரையில் பிணக்குத் தீரவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று என்னுடைய வழிபடு தெய்வம் கவலைப்பட்டு, இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வைக்கக் கூட மண்ணுக்கு வந்தான் என்று சொன்னால், நீங்கள்தான் உலகத்தில் தேர்ந்த சமயத்தினராக இருக்க வேண்டியவர்கள். உங்களுக்குப் பின்னாலே வந்தவர்கள், மிசினெறிகளாக மாறி, சமூக சேவை நிறுவனங்களாக மாறி, இன்றைக்குச் சோறும், கல்வியும், மருந்தும் கொடுப்பவர்களாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். நம்முடைய சமயம் கடவுளை எவ்வளவு தூரம் போற்றியதோ, அவ்வளவு தூரம் கடவுள் கொள்கையைப் போற்றாமல், கடவுள் நெறிகளைப் போற்றாமல், கடவுள் செய்த தொண்டுகளைப் போற்றாமல், நாம் இருந்ததின் பயனாக நம்முடைய சமயத்தில் புதிய நபர்களைக் காணவே காணோம்.

பழைய அடியார் சிலபேர் இருக்கிறார்களாம். மாணிக்கவாசகர் சொல்கிறார். புத்தடியார் சில பேர் வந்திருக்கிறார்களாம். இந்தப் பழைய அடியார் மிகவும் திமிருவார்கள். ‘இவன் நேற்றைக்குத்தான் வந்திருக்கிறான். திருநீறு பூசிக் கொண்டு; இவனை எப்படி உள்ளே சேர்ப்பது?’ என்று சொல்லுவார்கள். ‘பாங்குடையீர்! பழ அடியீர்!