பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

381


கோதிலா அமுதாக, நன்றுடையானாக, தீயதில்லாதானாக, இன்பனாக, துன்பம் இல்லாதவனாக இருக்கின்ற பரம்பொருளை, அளவு கடந்த பேரறிவும் பேராற்றலும் உடையவனாக இருக்கின்ற பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து, நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, உணர்வதின் மூலம், அந்த ஆற்றலை, சக்தியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் பெற்று, நம்முடைய பொறிகள், புலன்கள் வாயிலாக, இந்த உலகத்திற்குப் பயன்படுத்திப் பீடுடன் வாழ்தல், பெருமையுடன் வாழ்தல், பலரோடு சேர்ந்து வாழ்தல், குடும்பத்தைக் கோயிலாக்கல், வீதியைக் கோயிலாக்கல், சமுதாயத்தையே கோயில் ஆக்கல்- பொதுவுடைமை ஆக்குதல் ஆகிய உயர்நெறிகள் நாட்டிலே மலர வேண்டும் என்பதற்காகத்தான் வழிபாடு செய்கிறோம். எனவே இறைவனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய குறைகளில் இருந்து விடுதலை பெறுங்கள்: நிறைவுகளைப் பெறுங்கள்; அளவு கடந்த ஆற்றலை சக்தியைப் பெறுங்கள். அந்த ஆற்றலும், சக்தியும் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் வாழ்விக்கப் பயன்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு இறைவனைப் பிராத்தனை செய்யுங்கள்.

நீங்கள் செய்கிற பிரார்த்தனையினால் அல்லது காணிக்கையினால், அல்லது தேங்காயினால், இறைவனுக்கு யாதொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் பெற்றுக் கொள்வது என்ன? அதுதான் முக்கியமான செய்தி. உங்களுடைய வாழ்க்கையை மேலும் புதுமை உடையதாக, மேலும் ஆற்றல் உடையதாக, எதையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையதாக, ஆக்கிக் கொள்கிற ஆற்றலை, பேரறிவை, அருளார்ந்த சக்தியை, பேருள்ளத்தை, பெருங்கருணையைப் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்; அதற்குப் பிரார்த்தனை பயன்பட வேண்டும். அதுவும் அன்னையின் சந்நிதியிலே வழிபாடு செய்கிறீர்கள். அன்னை வழிபாடு,