பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடங்கி இருக்கிறார். குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார் என்று யாராவது சொன்னால் அல்லது அவர்தான் தமிழ் அர்ச்சனைக்குக் கர்த்தா என்று சொன்னால், அதைவிட முழுப் பொய் வேறொன்றும் இருக்க முடியாது. சுந்தரர் வரலாற்றில் சிவபெருமான்தான் முதன் முதல் தமிழ் அர்ச்சனை இயக்கத்தைத் தொடங்கி, ‘அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால், மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக’ என்று சொன்னார்.

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று சொன்னார். தமிழை வளர்த்தால் சைவம் வளரும்; சைவம் வளர்ந்தால் தமிழ் வளரும். இது நம்முடைய நாட்டு மரபு நால்வர் இந்த நெறியைப் போற்றி வளர்த்தார்கள். எனவே தமிழ் நம்முடைய உயிர் என்று சொன்னால், உயிரின் உயிர்ப்பாக இருப்பது சமயம் என்பதைச் சொல்லி, இரண்டும் இணைந்தவை; பிரிக்க முடியாதவை என்பதை நினைவூட்டுகிறேன்.

அடுத்து சமயம், சமுதாயம் என்பது கூட ஒன்றாகக் கிடந்த ஒன்று. குளம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; குடம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; உயிர் வேறு; உடல் வேறு அல்ல. எனவே சமயமும், சமுதாயமும் இணைந்த ஒன்று. தனி மனிதர்களை இணைப்பது குடும்பம் முதல்நிலையில், அடுத்த இடமாக-இணைப்பதில் பொது இடமாகக் கோயில் தான் இருந்தது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; என்று சொன்னார்கள்; கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அல்ல; கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற மனிதனுக்கு உத்தரவாதம் இருக்கும். பாதுகாப்பு இருக்கும்; அறம் இருக்கும்; அன்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் சொன்னார்கள். பழைய முறையை ஒட்டியே கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற பழக்கம் நமக்கு வர வேண்டும். கோயில்